கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 95வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் நலமுடன் மீண்டு வருகின்றமை மகிழ்ச்சி

ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்

வி.சுகிர்தகுமார் 

 கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 95வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் நலமுடன் மீண்டு வருகின்றமை மகிழ்ச்சி அளிக்கின்றது என ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.
இந்நிலையில் மக்கள் தொடர்ந்தும் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து நடப்பதன் மூலம் இத்தொற்றில் இருந்து விடுபட முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.பரமசிங்கம் தலைமையில் அக்கரைப்பற்று சுவாட் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான கொரோனா விழிப்பூட்டல் செயலமர்வில் வளவாளராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்று கடந்த காலத்தில் அதிகரித்திருந்த நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக அம்பாரை மாவட்டத்தில் உள்ள அரசசார்பற்ற சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் ஊடாக கிராம மட்ட மக்களுக்கும் விழிப்புணர்வு கருத்தினை எத்தி வைக்கும் முயற்சியின் ஒரு கட்டமாகவே இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இக்கருத்தரங்கில் மேலும் கருத்து வெளியிட்ட சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்   அன்ரிஜன் மற்றும் பிசிஆர்  பரிசோதனை தொடர்பில் மக்களிடம் பல கருத்துக்கள் நிலவுகின்றன. ஆயினும் அன்ரிஜன் பரிசோதனையில் பொசிடிவ் ஆக இனங்காணப்படும் ஒருவர் நெகடிவ் ஆக ஒருபோதும் இருக்க முடியாது. இதேநேரம் அன்ரிஜனில் நெகடிவ் ஆக இனங்காணப்படுகின்றவர்கள் பிசிஆரில் பொசிடிவ் ஆக வரவாய்ப்புள்ளது. இதனை மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அன்ரிஜன் என்பது தொற்றாளரை உடனடியாக அடையாளம் காணக்கூடிய வழிமுறை மாத்திரமே என்றார்.
இதேநேரம் முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளி மற்றும் கைகளுவுதல் போன்ற இலகுவான சுகாதார வழிமுறை மூலம் இத்தொற்றிலிருந்து 95 வீதம் நாம் பாதுகாப்பை பெறலாம் எனவும் குறிப்பிட்டார்.
ஆயினும் பரிந்துரைக்கப்பட்ட என் 95 மற்றும் சேர்ஜிகல் முகக்கவசம் மாத்திரமே பயன்படுத்தல் வேண்டும் எனவும் வெறுமனே சீலையினால் வடிவமைக்கப்பட்டுள்ள முகக்கவசம் அணிவதில் எவ்வித பயனுமில்லை என்றார். மேலும் இது ஒரு சுவாச நோய் எனவும் யாருக்கும் இந்நோய் தொற்றலாம் எனறும் அவ்வாறு தொற்றுடையவர்களின் மனம் நோகாத வகையில் நடந்து கொள்வது ஒவ்வொருவரினம் சமூகப்பொறுப்பு எனவும் கூறினார்.
இறுதியாக இக்கருத்தரங்கில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்.