ஓட்டமாவடியில் சில வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் இன்று திறக்கப்பட்டன.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த ஓட்டமாவடி பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்று (8) மீளவும் திறக்கப்பட்டுள்ளன.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட வர்த்தகர்கள் சிலர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து குறித்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி வைக்க ஓட்டமாவடி பிரதேச சபையில் கடந்த திங்கட்கிழமை (5)  நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் தொழில் புரியும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு தொடர் பீ.சீ.ஆர்.பரிசோதனையை மேற்கொண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தவே வர்த்தக நிலையங்களை மூடி வைக்க குறித்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று (7) சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் பிரதேச சபை மற்றும் வர்த்த சங்கத்தின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற கூட்டத்தில் இன்று (8) குறித்த பகுதி வர்த்தக நிலையங்களை திறந்து சுகாதார நடைமுகளைக் கடைப்பிடித்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் தெரிவித்தார்.

அத்துடன், தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை மூடப்படல் வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அந்தவகையில், இன்று வரத்தக நிலையங்களை திறந்துள்ள வர்த்தகர்கள் சுகாதார அறிவுறுத்தல்களை கடைப்பிடித்தவாறு தங்களுடைய வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது