பேக்கரி உரிமையாளரின் மனைவி கொலைவழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை – மட்டு.மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ஆயுதக் குழுவில் இணைவதற்கு முன் ஐந்து வருடங்கள் தொழிலாளியாக இருந்து வந்த பேக்கரி உரிமையாளரின் மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாகக்குற்றஞ் சாட்டப்பட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் புதன்கிழமை (29.07.2015) இத்தீர்ப்பினை வழங்கினார்.

பாலதாஸன் அல்லது திலகன் எனும் குறித்த எதிரி வந்தாறுமூலையைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை குமாரசாமிக்குச் சொந்தமான பேக்கரியில் சுமார் ஐந்து வருடங்கள் தொழிலாளியாக இருந்து வந்ததுடன், சம்பவத்திற்கு ஏழு மாதங்களுக்கு முன்னர் பேக் கரியிலிருந்து விலகி செங்கலடி ஈ.பி.டி.பி முகாமில் ஆயுதக் குழுவினருடன் இணைந்திருந்தார்.

சம்பவதினமான 25.12 2007 ஆம் திகதி இரவு 2 மணியளவில் எதிரி பாலதாஸன் பெயர் தெரியாத சில சந்தேகநபர்களுடன் தமது முதல் முதலாளியான கிருஷ்ணபிள்ளை குமாரசாமியின் வந்தாறுமூலையிலுள்ள பேக்கரியுடன் இணைந்த வீட்டுக்கு  வந்துள்ளார்.

அங்கு பேக்கரியில் உறங்கிக் கொண்டிருந்ததொழிலாளி ஒருவரை எழுப்பி அருகிலுள்ள கிருஷ்ணபிள்ளை குமாரசாமியின் வீட்டுக்குள் நுழைந்து குமாரசாமியை கதவைத் தட்டி எழுப்பியுள்ளார். இதன் போது உறங்கிக் கொண்டிருந்த குமாரசாமியும் அவரது மனைவி நாகமுத்து பிரேமாவதியும் வெளியே வராது காலையில் சந்திக்கலாமென உள்ளேயிருந்து கூறியுள்ளனர்.

இந்நிலையில் ஆத்திரமுற்ற எதிரி பால தாஸன் வீட்டுக்கதவை உதைத்து திறக்கச் சொல்லிக் கொண்டு தான் கொண்டுவந்த ரீ 56 ரக துப்பாக்கியால் கதவை நோக்கிச் சுட்டுள்ளார்.

கதவைத்துளைத்துச் சென்ற துப்பாக்கி ரவைகள் வீட்டினுள்ளே அச்சத்துடனிருந்த பேக்கரி உரிமையாளரின் மனைவி நாகமுத்து பிரேமாவதியின் கழுத்தை துளைத்துச் சென்றுள்ளது .

இச்சம்பவத்தால் நாகமுத்து பிரரேமாவதி மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் எதிரி மீது இரு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் பட்டு வழக்குத் தொடரப்பட்டது.

வந்தாறுமூலையைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் கிருஷ்ணபிள்ளை குமாரசாமியின் வீட்டுக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டும், இதன்போது குமாரசாமியின் மனைவி நாகமுத்து பிரேமாவதியை ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு, எதிரியான  ஈ.பி.டி.பி. உறுப்பினர் பாலதாஸன் மீதான வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது தொடுநர் தரப்பில் உறுதியான சாட்சியங்கள் அளிக்கப்பட்டதுடன் தடயப் பொருட்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

இவ் வழக்கில் வந்தாறுமூலையைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை உதயகுமார், கந்தையா ராசேந்திரம் ஆகியோர் பிரதான சாட்சிகளாக நடைபெற்ற சம்பவம் தொடர்பில் சாட்சி விபரங்களை வழங்கியதுடன், சந்தேக நபரையும் அடையாளம் காட்டியுமிருந்தனர்

இந்நிலையில் இரு குற்றச்சாட்டுகளுக்கும் எதிரியை நியாயமான சந்தேகத்திற்கப்பால் குற்றவாளியாகக் கண்ட நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் கடந்த புதன்கிழமை தீர்ப்பு வழங்கினார்.