கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்வதே தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரை -அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு!

பைஷல் இஸ்மாயில்
கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்வதே தொழில்நுட்ப குழுவின் பரிந்துரையாகும். அதனை நாங்கள் மாற்றமாட்டோம். அத்துடன் அடக்கலாம் என தெரிவித்து அறிக்கை கையளித்த குழு உத்தியோக பூர்வமற்ற குழுவாகும். என்றாலும் அவர்களின் அறிக்கையை ஆராய்வதற்காக பிரதான குழுவுக்கு சமர்ப்பித்திருக்கிறோம் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் மற்றும் தகனம் செய்வது தொடர்பில் ஏற்கனவே பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்த கேள்விக்கு சுகாதார அமைச்சர் இன்று (07) பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தொழில்நுட்ப குழுவொன்றை அமைத்திருந்தோம். அதன் பரிந்துரையாக இருப்பது, கொவிட்டில் மரணிப்பவர்களை தகனம் செய்ய வேண்டும் என்பதாகும்.
அதனால் அந்த பரிந்துரையை நாங்கள் செயற்படுத்துகிறோம். இந்த பயங்கரமான தொற்றுக்கு நாங்கள் முகம்கொடுக்கும்போது, இந்த விசேட பரிந்துரைகளை மத நோக்கத்துக்காகவோ அல்லது வேறு தனிநபர்களின் தேவைக்காகவோ நாங்கள் மாற்றியமைக்கமாட்டோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.