கவிஞர் த.மேராவின் பாடிமகிழ்வோம் சிறுவர் இலக்கியத்திற்கு மாகாண சிறந்த நூல் பரிசு

கவிஞர் த.மேரா எழுதிய பாடிமகிழ்வோம் சிறுவர் இலக்கியம் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சிறந்த நூலாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற தமிழ் இலக்கிய விழா கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையினை கருத்தில் இடம்பெறாத நிலையில், அந்நிகழ்வில் விருது வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள கலைஞர்களது விபரங்களும், சிறந்த நூல்கள் தொடர்பிலான விபரங்களும் பண்பாட்டு திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய கவிஞர் மேரா எழுதிய பாடி மகிழ்வோம் என்ற சிறுவர் இலக்கியமும் சிறந்த நூலாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கவிஞர் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அரசடித்தீவு கிராமத்தில் பிறந்து, பல்வேறுபட்ட கலைச்செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதுடன், பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.

இவர் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் சிறப்பு இளங்கலைமாணி, முதுதத்துவமாணி பட்டங்களைப் பெற்றுள்ளதுடன் அதே பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டத்தினையும் மேற்கொண்டு வருகின்றார். மரபு இலக்கியம், நவீன இலக்கியம், ஈழத்து இலக்கியம், நாட்டாரியல் முதலான துறைகள் சார்ந்து சர்வதேச, தேசிய மட்டங்களில் நிகழ்ந்த ஆய்வரங்குகளில் பல ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதோடு ஆய்விதழ்களிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

‘கலங்கிய வானம்’(2005), ‘காலத்தின் காயங்கள்’(2007), ‘மனக்காடு’(2011), ‘கொல்லப்பட்ட எங்களது வாக்குமூலங்கள்’(2020) ஆகிய கவிதைத் தொகுதிகளையும் ‘பாடி மகிழ்வோம்’(2019) என்ற சிறுவர் பாடல் நூலினையும் ‘மனமாற்றம்’(2020) என்ற சிறுகதைத் தொகுப்பினையும் ‘சிலப்பதிகாரப் பாத்திரங்களும் கண்ணகி வழக்குரைப் பாத்திரங்களும் – ஒப்பியலாய்வு’(2015), ‘உள்ளிருந்து வெளியே’(2016), ‘பின்காலனித்துவ நோக்கில் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்’(2020), ‘சங்க இலக்கியம்: சில பார்வைகள்’(2020), பன்முகநோக்கில் ஈழத்துப் புகலிடத் தமிழ் இலக்கியம்(2020) ஆகிய ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். ‘பேராசிரியர் செ.யோகராசாவின் முன்னுரைகளினூடாக: ஈழத்து நவீன இலக்கியங்கள் – படைப்பாளர்கள் – தடங்கள்’(2019) என்ற நூலின் பதிப்பாசிரியராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.