அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனத்திற்கு 45ஆண்டுகள்

திருக்கோவில் நிருபர் எஸ்.கார்த்திகேசு)
அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனத்திற்கு 45ஆண்டுகள்
நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கலை கலாசாரம் கல்வி மற்றும் ஆன்மீக ரீதியாக தடம்புரண்டு சென்று கொண்டு இருந்த தமிழ் இளைஞர்களை நெறிப்படுத்தவென 1976ல் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சமய நிறுவனமே அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதினமாகும்.
இந்து சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான திருநாவுக்கசு நாயனாரின் “என் கடன் பணி செய்து கிடப்பதே” எனும் தாரக மந்திரத்துடன் நாவுக்கரசர் சுவாமிகளின் நாமத்தை தாங்கி உழவாரத் தொண்டுகளை ஆலயங்களில் முன்னெடுக்கும் வகையில் இவ் குருகுல ஆதீனமானது ஸ்தாபிக்கப்பட்டதுடன் இவ் ஆதீனத்தை யாழ்ப்பாணம் சுன்னாகத்தினை சேர்ந்த ஆங்கில ஆசான் இறைபணிச் செம்மல் அமரர் சுவாமிநாதன் தம்பையா அடிகளாரின் தீர்ககதர்சனத்தில் உதித்து இன்று விருட்சமாக அம்பாறை மாவட்டத்தில் நிழல் கொடுத்துக் கொண்டு இருப்பது சிறப்பு.
அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனத்தின் தோற்றம் அதன் பணிகள் தொடர்பாக நாம் மீட்டுப் பார்ப்போமேயானால் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து 1976ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்திற்கு ஆங்கில ஆசானாக இடம்மாற்றம் பெற்று வந்து அமரர் சுவாமி தம்பையா அடிகளார் அம்பாறை மாவட்டத்தில் அப்போது நிலைகுலைந்து காணப்பட்ட இளைஞர்களை நெறிப்படுத்தி சைவத்தையும் தமிழையும் பாதுகாத்து வளர்த்தெடுக்கும் உயரிய சிந்தனையுடன் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனம் தூரநோக்குடன் அன்று தோற்றுவிக்கப்பட்டு இருந்தன.
திருநாவுக்கரசு நாயனார் குருகுலமானது பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக் கொண்டு தனது சமயப் பணிகளை வரலாற்று சிறப்பு மிக்க உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து கொண்டதுடன் தொடர்ந்து திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் மற்றும் சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயம் தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம் உட்பட அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் உழவாரத் தொண்டுகள் முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில் நாட்டில் உள்நாட்டு யுத்தம் தீவிர நிலையை அடைந்த போது இளைஞர் யுவதிகளை மத ரீதியாகவும் மன ரீதியாகவும் நெறிப்படுத்தி அவர்களின் எதிர்கால வாழ்கையினை அர்த்தமுள்ளதாக மாற்றவேண்டிய தேவைப்பாடுகள் உணரப்பட்டது. இந்நிலையில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் சமயப் பணிகளுடன் கல்விப் பணியையும் முன்னெடுக்க வேண்டி கட்டாய நிலையில் 1978.01.06ந் திகதி சிறுவர் இல்லத்திற்கான தூபம் இடப்பட்டு அது சிறுவர் இல்லமாக பதிவு செய்யப்பட்டு இருந்தன.
இதனைத் தொடர்ந்து அமெரிகா ஹவாய் ஆதீனத்தின் குரு முதல்வர் சுவாமி சிவாய சிவசுப்பிரமணிய சுவாமிகள் இமாலய நித்தியானந்தா சுவாமிகள் நுவரெலியா காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள் இலங்கை இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ரங்கநாயகி பத்மநாதனின் காணி அன்பளிப்புடன் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற தலைவர் அமரர் எம்.சிவநேசராசா மற்றும் அமரர் சங்கீதப்பூசணம் சி.கணபதிப்பிள்ளை முன்னாள் அதிபர் மு.சச்சிதானந்தம் அதிபர் நேசராசா டாக்டர் கே.சண்முகராசா ஆகியோரின் ஊக்கப்படுத்தலுடன் சுவாமி தம்பையா அடிகளாரினால் 10 மாணவர்களுடன் 1990.02.04ந் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தன்று தம்பிலுவிலில் நிரந்தரமான கட்டடத்தில் சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன.
இவ்வாறு உருவாக்கப்பட்ட குருகுலமானது மட்டக்களப்பு முதல் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்தும் தாய் தந்தையை இழந்த வறிய மாணவர்கள் இணைத்து கொள்ளப்பட்டு அவர்களின் வாழ்கைக்கு தேவையான கல்வி மற்றும் ஆன்மீக ரீதியான ஒழுக்க கல்வி முறைகள் போதிக்கப்பட்டு குருகுல ஆதீனத்தின் நோக்கமும் இலக்கும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.
அந்தவகையில் ஆலயங்களில் வெள்ளிக்கிழமைகளில் கூட்டுப் பிரார்த்தனைகள் 63 நாயன்மார்களின் குருபூஜை தினங்களில் இந்து சமய வினாவிடைப் போட்டிகளை நடாத்தி பரிசில்கள் வழங்கி இந்து மாணவர்களை ஊக்கப்படுத்துதல் கற்றல் உபகரணங்கள் வழங்குதல் சமய நூல்களை வெளியிடுதல் ஆலயங்களில் புராணபடலங்களை ஓதுவதற்கான ஒழுங்குளை முன்னெடுத்து வருடம் தோரும் நடைமுறைப்படுத்தியமை கலை இலக்கிய ரீதியாக இலக்கிய எழுத்தாளர்களை ஒன்றினைத்து சமய மற்றும் இலக்கிய நூல்களின் வெளியீகளையும் முன்னெடுத்து வந்தனர்.
அத்தோடு திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனத்தின் பக்க கிளைகளாக பிரதேச இளைஞர்களை ஒன்றிணைத்துக் அம்பாறை மாவட்ட இந்து மா மன்றம் மற்றும் சிவதொண்டர் அமைப்பினை தோற்றுவித்து அதனுடாக ஆலய தொண்டுகள் மற்றும் கதிர்காம யாத்திரியர்களுக்கான பணிகளை முன்னெடுத்தோடு பின்நாளில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் இருந்து சிவதொண்டர் அமைப்புக்கென தனியான ஒரு நிருவாக கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு தனது பணிகளை இன்றும் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றன.
இவ்வாறு பல்வேறு சமய மற்றும் கல்விப் செயற்பாடுகளுடன் சமூகப் பணிகளையும் சிறப்பாக முன்னெடுத்து வந்ததை கௌரவிக்கும் வகையில் 1993ஆண்டு இந்து சமய கலாசார அமைச்சு சுவாமி தம்பையா அடிகளாருக்கு இறைபணிச் செம்மல் எனும் பட்டத்தையும் வழங்கி கௌரவித்து இருந்தன. 1995ஆம் ஆண்டு சுவாமி தம்பையா அடிகளார் இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்த குருகுல ஆதீனத்தின் பணிகளை கண.இராஜரெத்தினம் அவர்களின் தலைமையிலான நிருவாக குழுவினர் ஆதீனத்தின் பணிகளை சிறப்பாக முன்னெடுத்து வந்தனர்.
இவ்வாறு திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனத்தின் சேவைகள் முன்னெடுத்து வரும் நிலையில் 2004.12.26ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப் பேரலை தாக்கத்தில் சிக்குண்டு குருகுல ஆதீனத்தின் கட்டடம் தரைமட்டமாக அழிந்து போக இல்லத்தில் இருந்த 55 சிறுவர்களும் சிவனருளால் அனைவரும் உயிர் தப்பியிருந்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் இன்று பல்வேறு சமய மற்றும் பொது அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றமை மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரிய விடயமாக பாராட்டப்படுகின்ற நிலையில் இவ் அமைப்புக்களின் தோற்றத்திற்கும் சிந்தனைக்கும் அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனமே முன்னோடி கோடினை வரைந்து காட்டியுள்ளமை என்பது மிகையல்ல.
அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீன சிறுவர் இல்லத்தின் அடையாளங்களாக அதில் கல்வி கற்ற மாணவர்களே காணப்படுவதுடன் ஆதீன மாணர்கள் இன்று வைத்தியர்கள் பொறியலாளர்கள் சட்டத்தரணிகள் அரச தனியார் வங்கி உத்தியோகத்தர்களாகவும் மற்றும் அரச திணைக்களங்களிலும் உயர் பதவிகளில் தொழில் புரிந்து வருவகின்றமை குருகுல ஆதீனத்தின் ஊடாக அமரர் சுவாமி தம்பையா அடிகளார் 45 ஆண்டுகளுககு முன்பு கண்ட கனவுகள் நிஜமாகி இருப்பதும் இறைவன் சிவன் சித்தமே.