திருமலை மட்டிக்களி லகூன்பார்க் தொடர்பான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றது.தலைவர் ந.இராசநாயகம்

பொன்ஆனந்தம்
திருகோணமலை நகரசபையால் மட்டிக்களி லகூன் பார்க் (Lagoon Park) அபிவிருத்தி தொடர்பாக பொது மக்கள் தமது ஆலோசனை கள் கருத்து களை முன்வைக்க முடியும் என நகராட்சி மன்ற த்தலைவர் ந. இராசநாயகம் தெரிவித்தார்.
இப்பார்க் அபிவிருத்தி தொடர்ச்சியாக ஆஞ்சநேயர் கோவிலிருந்து 22ம் படையணி வரை வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இதற்கு மேலதிகமாக மழைநீர் கடலுக்குச்செல்லும் 06 வடிகான்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 4 அடி அகலமான சீமெந்து கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதையும் இப்பகுதியில் அமைக்கப்படவுள்ளது.
இவ்வடிகான்கள் ஒவ்வொன்றும் 50 அடி முதல் 60 அடி வரை நீளமும் 3 அடி முதல் 4 அடி வரை அகலமும் உடையவை இவற்றை கட்டுவதற்கு பெரும் செலவு ஏற்படாமல் இலங்கை மின்சார சபையால் புதிய மின்கம்பங்கள் நடப்படும் போது கழற்றப்படுகின்ற பழைய மின்கம்பங்களில் நல்ல நிலையிலுள்ள மின் கம்பங்களை உபயோகிக்கப்படுகின்றன.
வடிகான்களும், நிரப்பப்பட்ட பகுதியிலிருந்து கடலுக்கு இறங்குவதற்கான படிகளும் அமைக்கப்பட்டு படிகட்டுகளில் பூங்சாடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சாதாரணமாக 50 அடி நீளமான வடிகானொன்றை அமைப்பதற்கு இடத்திற்கேற்ப 16 முதல் 20 வரையிலான மின்கம்பங்கள் தேவைப்படும். மின்சார சபையிடமிருந்து ஒரு மின்கம்பம் 600/= ற்கு கொள்வனவு செய்யப்படுகின்றது.
எனவே 50 அடி நீளமான வடிகானை அமைப்பதற்கு கூலி சேர்க்கப்படாமல் 12000/= மட்டுமே செலவிடப்படுகின்றது. இவ்வேலைகளை செய்வதற்கு தற்காலிக அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
மக்கி மூலம் நிரப்பப்பட்ட இடம் மட்டப்படுத்தப்பட்டு பிரதேச செயலகத்தில் பெறப்பட்ட அனுமதியை கொண்டு வரோதயநகர் பகுதியிலிருந்து குறைந்த செலவில் நகரசபை வாகனங்களை பயன்படுத்தி கிரவல் கொண்டு வந்து நிரப்பப்பட்டு (Top Layer) புல் பதிக்கப்படவுள்ளது.
இப்பகுதியில் Lagoon Volleyball, Lagoon Tennis, உடற்பயிற்சி உபகரணங்கள் பொருத்தப்பட்டு இளைஞர் கழகங்களிடம் பொறுப்பு கொடுக்கப்படவுள்ளது.
மேலும் மின்சாரசபையிடமிருந்து பெறப்பட்ட மின்கம்பங்கள் இவ்வேலைக்கு உகந்ததா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைய, இது தொடர்பாக பிரதி பிரதம செயலாளர் பொறியியல் சேவை உட்கட்டமைப்பு அலுவலகத்திடமிருந்து
மின்கம்பங்களை பயன்படுத்தி வேலைகளை செய்வதற்கு சிபாரிசு பெறப்பட்டுள்ளது.
மழை மற்றும் Covid-19 தொற்று காரணமாக வேலைகளில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இவ்வருடம் விரைவில் இவ்வேலைகள் முடிக்கப்பட்டு லிங்கநகர் பகுதியிலும் இது போன்ற அபிவிருத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அபிவிருந்தி நடைபெறும் இடங்களில் நகரசபையும் இளைஞர் அணிகளும் இணைந்து பூமரக்கன்றுகளை நடுகை செய்து அழகுப்படுத்துவது சிறப்பம்சமாகும்.
அத்துடன் பொருத்தப்பட்டுள்ள உடற்பயிற்சி உபகரணங்களை வருகை தருபவர்கள் பெரிதும் உபயோகப்படுத்துவதை காணக்கூடியதாகவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் குறைந்த செலவில் வளங்கள் மீள்பாவனைக்குட்படுத்தப்படுகின்றது. மேலும் இது தொடர்பான
தங்களின் ஆலோசனைகளும், அபிப்பிராயங்களும் வரவேற்கப்படுகின்றது. எனவும் தவிசாளர் தெரிவித்தார்.