கொவிட் 19 இன் காரணமாக மன்னாரில் எளிமையான முறையில் புதுவருட பிறப்பு விழா.

வாஸ் கூஞ்ஞ) 01.01.2021

பிறந்திருக்கும் இவ் புத்தாண்டை முன்னிட்டு மன்னாரில் கடந்த வருடங்களைப்போல் இம்முறை களைக்கட்டவில்லை. கொவிட் 19 இன் காரணமாக வழமையாக மன்னார் மறைமாவட்டத்தில் நடைபெறும் இரவு திருப்பலிகள் இடம்பெறவில்லை.

மாறாக மன்னார் மறைமாவட்டத்தின் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் காலையிலேயே விஷேட திருப்பலிகள் இடம்பெற்றன.

கொவிட் 19 இன் காரணமாக அந்தந்த பங்குகளில் உள்ள சனத்தொகைக்கு ஏற்றவாறு சமூக இடைவெளியை கவனத்தில் கொண்டு அதற்கேற்றவாறு திருப்பலிகளுக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படடிருந்தன.

முன்னைய காலங்கள்போன்று மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று ஆசீர் பெறுவதும் வாழ்த்துக்கள் பரிமாறுவதும் வெகுவாக குறைந்திருந்தமையும் காணக்கூடியதாக இருந்தது.

சுருக்கமாக தெரிவிக்கையில் இவ் வருடம் மன்னார் மாவட்ட மக்கள் மிகவும் எளிமையான முறையில் இவ் வருடப்பிறப்பை கொண்டாடியதும் குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறு இருக்க 2021 புதுவருட முதல் நாளில் வெள்ளிக்கிழமை (01.01.2021) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இவ் நீதிமன்ற பதிவாளர் க.நவதீனம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஐh தேசிய கொடியை ஏற்றிவைத்ததுடன் நீதவான் உட்பட நீதிமன்ற உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பொது சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் சுற்றறிக்கைக்கு ஏற்ப 2021 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல் நிகழ்வாக சத்தியபிரமாணம் செய்துக் கொண்ட நிகழ்வும் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மன்னார் மாவட்ட செயலகத்திலும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் தலைமையிலும் நிகழ்வுகள் இடம்பெற்றன.