சிங்கள மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் மட்டக்களப்பின் இரு அரசியல்வாதிகள் . த.சுரேஸ்

????????????????????????????????????

ந.குகதர்சன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசாங்கத்தின் இரண்டு தமிழ் பிரதிநிதிகளால் மட்டக்களப்பு மாவட்டம் மிக வேகமாக சிங்களவர்களின் கையில் போகவுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் நாட்டுப் பற்றாளர் நடேசன் அறக்கட்டளை அமைப்பின் ஊடாக வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுங்கான்கேணி, கிண்ணையடி ஆகிய கிராமத்தில் இருந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற ஒரு சிக்கலான நிலையில் எமது தமிழ் மக்களை அழிப்பதற்காக இந்த அரசாங்கம் பல்வேறு விதமான கட்டமைப்பு சார் இனவழிப்பு வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது. அது எங்களது மக்களை பயன்படுத்தி எங்களது பிரதிநிதிகளைப் பயன்படுத்தி திட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் இரண்டு தமிழ் பிரதிநிதிகள் உள்ளனர். அவர்கள் கிட்டத்தட்ட சிங்களவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுபவர்கள். இவர்கள் அரச இயந்திரத்தின் பகுதிகள். இவர்களால் தான் மட்டக்களப்பு மாவட்டம் மிக வேகமாக சிங்களவர்களின் கையில் போகவுள்ளது. அரசாங்கம் போட்ட திட்டம் நிறைவேறவுள்ளது.

அதில் ஒன்றுதான் தற்போது ஆரம்பித்துள்ளது மைலத்தமடு மாதவனை பிரச்சனை. இங்கு நடக்கும் நிலைமைகளை பார்த்தால் உங்கள் பகுதிக்கு வரும் அரசியல் தலைவர்களின் சேட்டை பிடித்து கேட்க வேண்டிய நிர்ப்பந்தம் வரும். அந்தளவிற்கு மிக மோசமாக அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஜனாதிபதி இங்கு கை வைத்து இங்குள்ள பொருளாதாரத்தை நசுக்குவதற்காக வேறு மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினருக்கு காணி கொடுக்கப்பட்டு சோளம் செய்கை செய்வதற்கு நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.

சிங்கள தேசம் தமிழ் மக்களை இலங்கைத் தீவில் இருந்து எவ்வளவு அடக்கு முறைகளை கொடுத்து எம்மை அடக்குவதற்கான வேலைத் திட்டங்களை எங்களது நபர்களை வைத்து பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இதனை நீங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கு.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கனகரெத்தினம் சுகாஷ், கட்சியின் முக்கியஸ்தர் க.குககுமாரராசா, பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்

இதன்போது வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுங்கான்கேணி, கிண்ணையடி ஆகிய கிராமத்தில் இருந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????