கல்முனை முடக்கத்தை நீக்க அரசியல்வாதி தலையிட்டால் வீதியில் இறங்குவோம்.

ஊடகச்சந்திப்பில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜன் சூளுரை.
(வி.ரி.சகாதேவராஜா, பாறுக் ஷிஹான்)

கொரோனாவிலிருந்து மக்களைக்காப்பாற்றவே அதிகாரிகள் தனிமைப்படுத்தல் முடக்கத்தை ஏற்படுத்தினார்கள்.அதில் ஹரீஸ் போன்ற அரசியல்வாதிகள் தலையிட்டு நீக்க முயற்சிப்பதாக அறிகிறோம்.அப்படியென்றால் வீதியிலிறங்குவோம். மக்கள் போராட்டம் வெடிக்கும்.

இவ்வாறு த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கல்முனையில் நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் சூளுரைத்தார்;.

கல்முனை ஊடக மையத்தில் நேற்று(30) புதன்கிழமை இ ம்   முதலாவது   ஊடகச்சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான ராஜன் கே.சிவலிங்கம் கே.செல்வராசா வி.சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உறுப்பினர் ராஜன் மேலும் கருத்துரைக்கையில்:

கொரோனாவை வைத்து கல்முனையில் அரசியல் நாடகம் அரங்கேறிவருகிறது. பொதுமக்கள் எம்மிடம் விடுத்த வேண்டுகோளையேற்று மேயரிடமும் சுகாதாரபணிப்பாளரிடமும் பொலிசாரிடமும் சென்று மகஜர்களை வழங்கி மாநகர முடக்கத்தின் அவசியம் பற்றி எடுத்துக்கூறினோம்.
பின்பு அவர்கள் கொழும்புக்கு அறிவித்ததன்பேரில் கல்முனை முடக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில் அதிகாரிகளே முடக்கினார்கள். இது சாதி இன மதபேதம் பார்த்துமுடக்கப்படவில்லை. கொரோனாவின் உக்கிரத்தாக்கம் எங்குள்ளதோ அதைப்பார்த்தே அதிகாரிகள் தீர்மானித்தார்கள்.
ஆனால் சிலர்ஏதோ நாங்கள்தான் இனரீதியாக முடக்கியதாக முகநூலில் விமர்சனம் செய்கிறார்கள்.

இலங்கையில் சுகாதார அதிகாரியொருவர் இரவுபகல் பாராது இனமதபேதம் பாராதுஅர்ப்பணிப்புடன் 24மணித்தியாலம் சேவை கடமை செய்கிறார் என்றால் அது கல்முனைப்பிராந்தியசுகாதாரசேவைபணிப்பாளர் டாக்டர் சுகுணன் அவர்கள்தான். அவரோடு இணைந்த டாக்டர்கள் ஊழியர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

ஆனால் சில ஈனப்பிறவிகள் அவரையும் முகநூலில் கொச்சைப்படுத்துகின்றனர். இனவாதசாயம் பூசுகின்றனர். உண்மையான கடமைவீரர்களையும் மனம்சலிக்கவைக்கும் துர்ச்செயலைச் செய்யாதீர்கள்.அவருக்காக நாம் என்றும் கைகொடுப்போம்.

கல்முனை மாநகரிலுள்ள அத்தனை கடைக்காரர்களும் கொரோனா தங்களுக்கு இல்லையென்ற சான்றிதழைக்காட்டினால் மட்டுமே திறக்கஅனுமதி வழங்கவேண்டும். ஏனென்றால் பிரதான சந்தையில் பிசிஆர் செய்ய சுகாதாரதுறையினர் சென்றபோது 100க்கு மேற்பட்டோர் கடையைபூட்டிவிட்டு ஓடியதாக அறிகிறோம். இவர்கள்தான் பின்னர் சமுகத்தில் கொரோனாவை பரப்புவார்கள். மக்கள் கவனமாகஇருக்கவேண்டுகிறோம். என்றார்.

ஏனைய உறுப்பினர்களான கே.சிவலிங்கம் கே.செல்வராசா வி.சந்திரன் ஆகியோர் கருத்துரைக்கையில்:

 மக்களைக் காப்பாற்றவேண்டிய கடமை எங்களுக்குமுள்ளது.எனவே நாம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.மக்கள் சுகாதாரவழிகாட்டலைப்பின்பற்றினால் இந்நோயிலிருந்து தப்பலாம். சுகாதாரம் பாதுகாப்புத்துறையோடு ஒத்துழைக்கவேண்டும்.என்றனர்.