திருகோணமலை மாவட்டத்தை கொவிட் தொற்றற்ற மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

திருமலை அரச அதிபர்.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

திருகோணமலை மாவட்ட கொவிட் செயலணி நேற்று மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் மாவட்ட செயலகத்தில் கூடியது.

கடந்த 18 ம் திகதிக்கு பின்னர் திருகோணமலை மாவட்டத்தில் 108 நபர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.இருப்பினும் தற்போதைய நிலையில் குறித்த பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.எனவே குறித்த பரவலை மேலும் கட்டுப்படுத்தி திருகோணமலை மாவட்டத்தை கொவிட் தொற்றற்ற மாவட்டமாக மாற்ற அனைவரும் சுகாதார நடைமுறைகளை அனுசரித்து நடக்குமாறு அரசாங்க அதிபர் இதன்போது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் சுய தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் குறித்த பிரதேச செயலாளர்கள் மூலம் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டும் வருகின்றன.தனிமைப்படுத்தப்பட்ட பிரதேங்களில் உள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான  நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மேலும் அப்பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
தற்போது நிலவும் மழையுடன்
கூடிய காலநிலையை கருத்திற்கொண்டு மக்கள் தம் சுற்றாடலை தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.இதன் மூலம் டெங்கு நோய்பரவாமல் தடுக்க முடியும். அதிக மழை காரணமாக சில பிரதேசங்களில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக வடிகான்கள் மூடப்பட்டு காணப்படுகின்றமை , சில சட்டவிரோத நிர்மாணிப்புக்களாலும்   வெள்ளநீர் வீடுகளுக்குள் புகவும் நீர் வழிந்தோடாமல் இருக்க ஏதுவாகவும் அமைந்துள்ளதாகவும் குறிப்பாக வெள்ளநீர் தேங்கிய பிரதேங்களில் உரிய தரப்புக்களை தொடர்புகொண்டு வெள்ளநீரை வழிந்தோட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எம். ஏ.அனஸ்,பிரதேச செயலாளர்கள், முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் , திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.