கல்முனையின் தனிமையால் பொதுப் போக்குவரத்தும் முடக்கம்;

ஊழியர்கள் கடமைக்கு செல்வதில் சிரமம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை நகரம் உள்ளிட்ட சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, முடக்கப்பட்டிருப்பதனால் தூர இடங்களுக்கான பொதுப் போக்குவரத்து சேவைகள் செயலிழந்துள்ளதால் அரச, தனியார் ஊழியர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

கல்முனை தெற்குப் பிரதேசத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதையடுத்து, கல்முனை செய்லான் வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரையான 11 கிராம சேவகர் பிரிவுகள் திங்கட்கிழமை (28) இரவு முதல் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியினுள் கல்முனை பிரதான பஸ் நிலையம் அமைந்திருப்பதனால் அங்கு பஸ்கள் வந்து செல்வது முற்றாக தடைப்பட்டு, அப்பகுதி வெறிச்சோடிக்காணப்படுகின்றது.

அதேவேளை தனிமைப்படுத்தல் பிரதேசங்களை ஊடறுத்து செல்லும் கல்முனை- அக்கரைப்பற்று நெடுஞ்சாலை ஊடாக பொதுப் போக்குவரத்துகள் அனுமதிக்கப்படும் எனவும் இப்பகுதியினுள் வாகனங்களை நிறுத்துவதும் ஆட்களை ஏற்றி இறக்குவதும் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் செவ்வாய்க்கிழமை நண்பகலுக்குப் பின்னர் இந்த நெடுஞ்சாலையின் செய்லான் வீதி முனையிலும் வாடி வீட்டு வீதி சந்தியிலும் பொலிஸ் காவல்தடை (Beriyal) போடப்பட்டு, போக்குவரத்துகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன. இவ்விரு இடங்களிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் இந்த நெடுஞ்சாலை ஊடாக அம்பாறை, அக்கரைப்பற்று, பொத்துவில் போன்ற இடங்களில் இருந்து மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கான பொதுப் போக்குவரத்து சேவைகள் முற்றாக செயலிழந்துள்ளன. இப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளமையால் தூர இடங்களில் கடமையாற்றும் அரச, தனியார் ஊழியர்களினால் இன்று புதன்கிழமை (30) கடமைக்கு செல்ல முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை கல்முனையின் தனிமைப்படுத்தல் பகுதியில் அமைந்துள்ள கல்முனை மாநகர சபை, பிரதேச செயலகம், வலயக் கல்வி அலுவலகம், மின்சார சபை உள்ளிட்ட அரச காரியாலயங்களும் மக்கள் வங்கி உள்ளிட்ட சில வங்கிகளும் மூடப்பட்டிருந்தன. இப்பகுதிகள் சனநடமாட்டமின்றி வெறிச்சோடிக்கணப்பட்டன.

அதேவேளை தனிமைப்படுத்தப்படாத பகுதியில் அமைந்துள்ள கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம், காணிப் பதிவகம், நீர்வழங்கள் சபை, பிரதான தபாலகம் உள்ளிட்ட சில அரச அலுவலகங்களும் இலங்கை வங்கி உள்ளிட்ட இன்னும் சில வங்கிகளும் திறக்கப்பட்டிருந்தன.

எனினும் போக்குவரத்துப் பிரச்சினை காரணமாக இவ்வலுவலகங்களில் ஊழியர்களின் வரவு மிகவும் குறைந்து காணப்பட்டிருந்ததுடன் சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.