சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர் முஹர்ரம் பஸ்மீர் இராஜினாமா ! நஜீமை நியமிக்க ஜும்மா பள்ளி கோரிக்கை !

நூருல் ஹுதா உமர்)

கல்முனை மாநகர சபையில் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு சார்பில் கடந்த மூன்றாண்டுகளாக உறுப்பினராக இருந்த முஹர்ரம் பஸ்மீர், அப்பதவியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தனது உறுப்பினர் பதவியை கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீபிடம் இம்மாதம் 31ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இராஜினாமா செய்து கடிதத்தை கையளித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற கல்முனை மாநகர சபை தேர்தலில், சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை முன்வைத்து, சாய்ந்தமருது முஹையத்தின் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் மக்கள் பணிமனையினால் தோடம்பழ சின்னத்தில் களமிறக்கப்பட்ட சுயேச்சைக்குழு சார்பில் 19ஆம் வட்டாரத்தில் போட்டியிட்டு இவர் வெற்றியீட்டியிருந்தார்.

அவர் இராஜினாமா செய்த வெற்றிடத்தை முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரும் வர்த்தகருமான சாய்ந்தமருது அல் அக்பர் ஜும்மா பள்ளிவாசலின் பிரதித்தலைவர் எம்.ஐ. நஜீமை கொண்டு நிரப்புமாறு கோரிய கோரிக்கை மனுவை நேற்று மாலை சாய்ந்தமருது அல் அக்பர் ஜும்மா பள்ளிவாசலின் உப தலைவர்.எம்.எம்.எம். றளீம், செயலாளர் யூ. கே. சரூக், பொருளாளர் ஏ.எம்.இர்ஷாத், ஏ .டப்ளியூ. எம். றிணோஸ் அடங்கிய குழுவினர் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலின் செயலாளர் அப்துல் மஜீத் (ரோஷன் மரைக்காயர்) அவர்களிடம் கையளித்தனர்.

கடந்த மாநகரசபை தேர்தல் வேட்பாளர் தெரிவின் போதும் 19ஆம் வட்டாரத்தில் போட்டியிட அக்பர் ஜும்மா பள்ளிவாசலின் பிரதித்தலைவர் எம்.ஐ. நஜீமை களமிறக்குமாறு கோரி கிராம அபிவிருத்தி சங்கம், விளையாட்டு கழகங்கள், இளைஞர் கழகங்கள், மீனவ அமைப்புக்கள் உட்பட பல சமூக நல அமைப்புக்களும்  19ஆம் வட்டாரத்தை சேர்ந்த 273 குடும்பங்களின் சார்பிலானவர்களின் கோரிக்கைகளும் அடங்கிய மகஜரை சாய்ந்தமருது அக்பர் ஜும்மா பள்ளிவாசலினால் சாய்ந்தமருது மக்கள் பணிமனைக்கு கையளித்திருந்தும் அக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இராஜினாமா செய்த கல்முனை மாநகர சபை உறுப்பினர் முஹர்ரம் பஸ்மீர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தமையும். பள்ளிவாசலின் வேண்டுகோளை ஏற்று அந்த தேர்தலிலும் அதன் பின்னர் வந்த ஜனாதிபதி, பொதுத்தேர்தல் ஆகியவற்றிலும் சாய்ந்தமருது மக்கள் பணிமனையின் தீர்மானங்களுக்கு ஆதரவாகவே அக்பர் ஜும்மா பள்ளிவாசலின் பிரதித்தலைவர் எம்.ஐ. நஜீமும், அக்பர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளும், அப்பிரதேச மக்களும் வெற்றிக்காக செயற்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.