மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சுபீட்சத்திற்கு மனம் திறந்தார் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ றாசிக்.

செவ்வி கண்டவர் : நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழங்கப்பட்ட நிவாரணப் பணிகள் வெற்றிகரமாக முடிவடைவதற்கு உதவிய அனைவரும் சமூகப் பொறுப்புக்களைத் தோளில் சுமந்து திரிவதாக அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ றாசிக் தெரிவித்தார்.

கொரோனாத் தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டு, வெளித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிரு ந்த மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் தொடர்பில், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ ராசிக் முக்கிய விடயங்களை எமது பத்திரிகைக்கு தெளிவுபடுத்தினார்.

கேள்வி : அக்கரைப்பற்று பிரதேச சபை பற்றியும் அதன் தவிசாளராக நீங்கள் தொடர்ந்தும் தெரிவாவது பற்றியும் கூறுங்கள்.

பதில் : சுமார் 2500 குடும்பங்கள் அக்கரைப்பற்று பிரதேச சபைக்குள் வாழ்கின்றன.கடந்த 2011 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சரும் இப்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான  ஏ.எல்.எம் அதாஉல்லா அக்கரைப்பற்று மாநகர சபையிலிருந்து இப்பகுதியை வேறாக்கி பிரதேச சபையாகப் பிரகடனப்படுத்தியதால், இங்குள்ள 2500 குடும்பங்களுக்கும் சிறப்பாக சேவையாற்றப்படுகிறது. ஐந்து வட்டாரங்களையும் சுமார் ஐயாயிரம் வாக்குகளும் உள்ள இச் சபை 2011 மற்றும் 2018 ஆண்டுகளில் இரண்டு தடவைகள் தேர்தலை எதிர்கொண்டது. இரு தடவைகளும் என்னையே இம் மக்கள் தவிசாளராகத் தெரிவு செய்தனர்.

தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லாவும் இதற்கு உதவியதுடன், இறைவனின் நாட்டமுமே இந்த தவிசாளர் பதவியைத் தந்தது. இரண்டாவது தவணையில் 2018 2019 ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை சபையை நடாத்திச் செல்வதில் பல சவால்களை இச்சபை எதிர்கொண்டதை எமது மக்கள் மறப்பதற்கில்லை. தேசிய காங்கிரஸ், ராஜபக்ஷக்களுக்கு விசுவாசமான கட்சி என்பதால் அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கடைக்கண் பார்வை கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. நிதி உட்பட அபிவிருத்தி,மக்கள் நலன்சார்புத் திட்டங்கள் முற்றாகத் தடைப்பட்டிருந்த காலமாகவே 2018 மற்றும் 2019 காலங்கள் இருந்தன. ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவான கையோடுதான்,உலகையே உலுக்கி எடுக்கும் கொடிய கொரோனா தாண்டவம் ஆடத் தொடங்கியது.

கேள்வி : கொரோனா காலத்தில் உங்கள் பிரதேசத்தின் மக்கள் நிலை எப்படி இருக்கிறது

பதில் : 2020 மார்ச் மாதம் எமது நாட்டையும் இந்தக் கொரோனா பீடித்த போது,எல்லோரை யும் போல அக்கரைப்பற்று பிரதேச சபை மக்களும் பாதிக்கப்பட்டனர். 68 கிலோ மீற்றர் சதுரப் பரப்பிலுள்ள எமது சபையில், ஆலிம்நகர், இசங்கணிச் சீமை வட்டாரங்களில் உள்ள மக்களின், வாழ்வாதாரம் சவாலுக்குட்பட்டதுதான். பெரும்பாலும் இங்குள்ள மக்களில் அதிகமானோர், நாளாந்த உழைப்பாளிகள், என்பதால் நாடு பூராவும் முடக்கப்பட்டிருந்த இவ்வருடத்தின் மார்ச் மாதப் பகுதியில், இங்கு பெரும் பிரச்சினைகள் தோற்றம் எடுத்தன. பிரதேச செயலகம், அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம், சமூகத் தொண்டர்கள், விளையாட்டு கழகங்களின் உதவிகளால் கிடைத்த நிவாரணங்களை வழங்கி நிலைமைகளிலிருந்து ஓரளவு விடுபட நேர்கையில், கொரோனாவின் இரண்டாம் அலை, மக்களைப் பேரிடிக்குள் ஆழ்த்தியுள்ளது.

மேலும் மார்கழி மாதத்தில் வழமையாக ஏற்படும் வெள்ளம்,காற்று,குளிர் போன்ற இயற்கையின் கெடுபிடிகளும் சேர்ந்து, மக்களின் இயல்பு வாழ்வைப் பெரிதும் குழப்பியுள்ளது.மீனவர்கள் கடலுக்குச் செல்லாதுள்ளனர். கால்நடைகளின் மேய்ச்சல் பகுதிகளுக்கு செல்லும் இடங்களில் முதலை, பாம்புகளின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளன. நெற் செய்கை வயல்கள்,நீரில் மிதக்கும் அதே வேளையில்,கொரோனாத் தொற்றினால் ஒரு பகுதி முடக்கப்பட்டும் இருந்ததால், நாளாந்த கூலித் தொழிலாளர்களும் தொழிலின்றி உள்ளனர். இவை, நாளாந்த தொழிலாளர்களின் வருமானத்தைப் பாதித்துமுள்ளது. மாரி காலங்களில்  தூண்டிலில், சிறுவர்கள் மீன் பிடித்து, பொழுதைக்கழிப்புடன் கழிப்பது வழமை. இவ்வாறு, மீன் பிடித்துக் கொண்டிருந்த சிறுவர்கள், சிலரிடம் நல்ல விளையாட்டா? என்று வினவியபோது, வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடித்து விற்பதாக ஏக்கம், கவலை தோய்ந்த முகத்துடன் பதிலளித்தனர். இதுதான், இன்றுள்ள சவால். பெரிதாக இல்லாவிட்டாலும் இவர்களின் குடும்பங்கள் உண்பதற்கு வழிகள் செய்து கொடுக்க வேண்டும். அவசரமாகச் செய்வதென்றால், நிவாரணம் வழங்குவதுதான் உள்ள வழி.

கேள்வி : உங்களின் சபைக்கான பிரதான வருமானம், தேவைகள், சிக்கல்கள் என்ன?

பதில் : அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு காணிப் பரிமாற்றங்களால் கிடைக்கும் முத்திரை வரி மற்றும் நில வரிகளே, பிரதான வருமானமாகவுள்ளது. அதிகளவில்,விரிந்து பரந்து கிடக்கும் வெற்றுக் காணிகள்தான் இச்சபையின், பொருளாதார முதுகெலும்பு. இயற்கையின் இக் கொடை,சிலரால் சட்டவிரோதமாகக் கையாளப்படுவது குறித்து பல முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. இதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுப்பது பற்றி, பிரதேச சபை கவனமெடுத்து வருகிறது. இங்குள்ள மையவாடியை ஒளியூட்டி அழகுபடுத்தும் திட்டங்களின் பெரும்பகுதி பூர்த்தியடைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த மையவாடியி ன் பெயரில்தான் மற்றொரு வட்டாரம் உள்ளது. மக்காமடி வட்டார மக்கள், பரம்பரை, பரம்பரையாக தேசிய காங்கிரஸின் வழியில் நிற்பவர்கள். சுமார் இரு நூறு வருடங்கள் பழைமை வாய்ந்த, இந்த மையவாடியில்தான், ஊரின் முதியோர்கள், உலமாக்கள் அடங்கப்பட்டுள்ளனர். மட்டுமல்ல அக்கரைப்பற்று மாநகர சபைக்குள் வாழும் மக்களின் ஐனாஸாக்களும் இங்குதான் நல்லடக்கம் செய்யப்படுகிறது. எமது உறவுகள் வாழும் ஏன், நாமும் நிரந்தரமாக வாழப்போகும் மறுமைக்கு வழிகாட்டும் இவ்வாறான அடக்கஸ்தலங்களை, பிறர் பயந்தோடுமளவுக்கு வைக்காமல், கவர்ச்சியாக, ஒளி நிறைந்த தாகப் புனரமைப்பதே சிறந்தது. பல இலட்சம் ரூபா செலவில், இப்பணி முடிக்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் கிலோ மீற்றர், கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் திட்டத்தில், பிரதேச சபையின் சில வீதிகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள திட்டங்களாக மக்காமடி வட்டாரத்திலுள்ள கேணியை (குட்டை) நீர்ப் பூங்காவாகப் புனரமைத்து சிறுவர்களுக்கு மகிழ்ச்சிகரமான சூழலை உருவாக்குவது,தோணிச் சவாரியை ஆரம்பிப்பது, அதாஉல்லா விளையாட்டு மைதானத்தின் வெளிச் சுற்றுப்பகுதியை நடைப் பூங்காவாக மாற்றுதல், இங்குள்ள பாடசாலைகளுக்கு சிறந்த கட்டடங்களை கொண்டு வருவது என்பவைதான் உள்ளன.

எமக்குள்ள பிரதான சவால், குப்பைகளைக் கொட்டுவது, சேமிப்பது தான். இதற்காகத்தான்,வருமானத்தின் அரைவாசி நிதி செலவிடப்படுகிறது. அஷ்ரப் நகரிலுள்ள பள்ளக்காடு என்ற பகுதியில்தான்,குப்பைகள் கொட்டப்படுகின்றன.சுகாதாரப் பிரச்சினை,சுற்றாடல் சீர்கேடுகள் ஏற்பட்டு, குப்பைகளைக் கொட்டுவதற்கு பள்ளக்காட்டு பிரதேச மக்கள்  எதிர்ப்புக்கள் தெரிவிக்கும் போதுதான், சவால்கள் இன்னும் அதிகரிக்கவுள்ளன என்றார்.