கல்முனை நகரில் ஜனாஸா எரிப்புக்கு எதிரான வெள்ளைக் கொடி அமைதி வழி கவனயீர்ப்பு போராட்டம்.

ஜனாஸா எரிப்புக்கு எதிரான வெள்ளைக் கொடி அமைதி வழி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று (25.12.2020) கல்முனை நகரில் இடம் பெற்றது.
உலக நாடுகளில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்ற போதும் எமது இலங்கை நாட்டில் மாத்திரம் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பது ஆட்சியாளர்களின் இனவாத செயற்பாட்டை வெளிப்படுத்துகின்றது.

இலங்கை நாட்டில் பிறந்து இலங்கை நாட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்ற எமது ஜனாசாக்களை எமது சமய முறைப்படி அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும். முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களை எரிப்பதை உடன் நிறுத்த வேண்டும் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு இந்த கவனயீர்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் ரஸாக், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.மனாப் உட்பட தமிழ் முஸ்லிம் மக்கள் எனப் பலர் இதில் கலந்து கொண்டனர்.
அரசியல் வேறுபாடுகளை மறந்து எமது சமூகத்தின் கடைசிக் கடமைக்காக அனைவரும் ஒன்று பட்டு ஒருமித்த குரலில் இந்த நாட்டின் அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் அழுத்தம் தெரிவிக்க ஒன்றுபடுமாறும் இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.