பின்தங்கிய பிரதேச பாடசாலை மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.

(வயிரமுத்து திவாகரன்)

மட்டகளப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது தொழிற்பயிற்சி மூலம் இளைஞர்களை வலுப்படுத்தி அவர்களுக்கான தொழில்வாய்ப்பு மற்றும் உயர்கல்விக்கான வழிகாட்டலை வழங்குவதோடு மட்டுமன்றி தற்போதைய எமது சமூகத்துக்கு தேவையான அவசிய தேவைகளை கருத்தில் கொண்டு “மாற்றத்திற்கான வலுவூட்டல்” என்னும் தொனிப்பொருளில் பல்வேறுபட்ட சமூக நலன்சார் செயற்றிட்டங்களை விவேகானந்தர் சமுதாய நிறுவனத்தின் ஊடாக முன்னெடுத்து வருகின்றனர்.

விவேகானந்தர் சமுதாய நிறுவகமானது சிறுவர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் வயோதிபர்கள் என பல்வேறு இலக்கு குழுக்களை வலுப்படுத்தும் நோக்கில் தமது செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக சிறுவர்கள் மாணவர்களுக்கான வலுவூட்டல் செயற்றிட்டங்களை முன்னிலைப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

அதனடிப்படையிலேயே வருடாவருடம் சுவாமி விவேகானந்தரின் ஜனன தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த வருடமும் புலம்பெயர் உறவுகளின் உதவி மூலம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

அதன் ஒரு பகுதியாக இலண்டனிலிருந்து வரப்புயர என்னும் அமைப்பின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் காணப்படுகின்ற வாகனேரி என்னும் கிராமத்தில் உள்ள மட்/ககு/வாகனேரி கோகுலம் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் வறுமைக்கோட்டின் கீழ் கற்றலில் ஆர்வமுள்ள மாணவர்களிற்கு இன்று (25.12.2020) அப்பியாச கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கான மிகப் பெறுமதியான இந்த பொருட்கள் இலண்டனிலிருந்து வைத்தியர் சிவா வசீகரன் அவர்களின் ஏற்பாட்டில் வரப்புயர என்னும் அமைப்பினூடாக வழங்கிவைக்கப்பட்டது.

தமது நிறுவகத்தின் நன்கொடையாளர்களாக வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் உறவுகளின் உதவியோடு இவ்வாறான பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக ஜனவரி மாதத்திலிருந்து மேற்கொள்வதாக விவேகானந்தர் சமுதாய நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.