அக்கரைப்பற்றில் பொதுச் சந்தை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களை திறக்க பரிந்துரை

பைஷல் இஸ்மாயில் –

இலங்கையில் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலை அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து முடக்கப்பட்டிருந்த அக்கரைப்பற்று பிரதேச தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுச் சந்தை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களை இன்று (23) திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகி தெரிவித்தார்.

அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூஸா நக்பர் தலைமையில் (22) கொறோனா செயற்பாட்டு வழிகாட்டல் குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் தொற்றாளர்கள் இனம்காணப்படாத நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன் அக்கரைப்பற்றின் ஏனைய அனைத்து கடைகளும், சேவை நிலையங்களும் மாலை 6 மணி வரை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி திறக்கலாம் என்றும், அவ்வாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத கடைகள் மூடப்படுவதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் ஒன்று சேரும் நிகழ்வுகள் மற்றும் பள்ளிவாசல்களில் தொழுகை என்பன தொடர்ந்தும் தற்காலிகமாக தவிர்க்கப்படுவதுடன், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள், சலூன்கள் திறப்பது தவிர்க்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான அறிவித்தல் வரும் வரை கடைகளை திறக்கவேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

உணவுக் கடைகள் தொடர்ந்தும் உணவுகளை கொண்டு செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவதுடன், வங்கிகள் பகல் 12 மணிவரை மட்டுபடுத்தபட்ட அளவில் இயங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே சுகாதார துறை அதிகாரிகளின் ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் கவனத்தில் கொண்டு இவைகளை நடைமுறைப்படுத்த ஒத்தாசை வழங்க வேண்டும் என்று அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகி பொதுமக்களை வினயமாக கேட்டுக் கொள்கின்றார்.

குறித்த கலந்துரையாடலில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இராணுவ பொறுப்பதிகாரி, உதவி பிரதேச செயலாளர், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.