ராஜபக்ச குடும்பத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான இடைவெளி இல்லாமல் செய்யப்பட வேண்டும்.

கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி

ஹஸ்பர் ஏ ஹலீம்

இலங்கை அரசியல் வரலாற்றில் அன்று தொடக்கம் இன்று வரை முஸ்லிம்களும், முஸ்லிம்களின் தலைமைகளும் இந்நாட்டின் அரசுக்கும் அதன் இறைமைக்கும் பக்கபலமாகவும்  அனுசரணையாகவும் இருந்த வரலாறுகளே காணப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை 2005, 2010ம் ஆண்டுகளில்  ஆட்சி பீடம் ஏற்றுவதற்காக முஸ்லிம்களும் பாரிய பங்களிப்புகளை செய்திருந்தார்கள் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி அவர்கள் இன்று (23) ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது . தொடர்ந்தும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ஆனால்  அக்காலங்களில் செயற்பட்ட சில   கடும்போக்கான அமைப்புகளும், அவற்றின் தலைமைகளும், மற்றும் வாக்கு வங்கிகளே இல்லாது ராஜபக்ச குடும்பத்தின் நிழல் மீது  தொங்கிக்கொண்டு இனவாதத்தையும், குரோதத்தையுமே ஆயுதமாக எடுத்துக் கொண்ட சில அரசியல்வாதிகளுமே இந்த சிறுபான்மை அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி முஸ்லீம்களது பொருளாதாரத்தையும் உயிர்களையும் மதத் தலங்களையும் அழித்து‌ தொடர் தொல்லைகளை கொடுத்து வந்தார்கள்.
இவ்வாறான அத்துமீறிய, சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போனதே முஸ்லிம்களுக்கும் ராஜபக்ச குடும்பத்தினருக்கும் இடையிலான  இடைவெளியை அதிகரிக்க காரணமாக அமைந்தது.
முஸ்லிம்களுக்கு எதிராக வீணாக அரங்கேற்றப்பட்ட கிரீஸ் மனிதன் பிரச்சினை, அம்பாறை கொத்து ரொட்டி பிரச்சனை, கண்டி- திகன  பிரச்சினை , கொலைகாரன் சஹ்ரானுடைய பிரச்சினை, கொரோனாவை பரப்பிய குற்றச்சாட்டுக்கள் போன்று  எத்தனையோ குற்றச்சாட்டுக்கள் அநியாயமாக சுமத்தப்பட்டன.
ஆனால் அவை யாவும் எந்தவித அடிப்படையும்  இல்லாத பொய் என்பது இப்போது எல்லோராலும் உணரப்படுகிறது.
இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டிருந்தால் ராஜபக்ச குடும்பம் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்திருக்க மாட்டார்கள்.
மைத்திரிபால சிரிசேன அவர்களை ஜனாதிபதியாக்குவதற்கு முஸ்லிம்கள் ஒன்று பட்டு வாக்களித்தது அவர் மீது இருந்த நம்பிக்கையில் அல்ல. மஹிந்த ராஜபக்ஷ அரசு மீது அப்போது இருந்த சந்தேகம் மாத்திரமே.
அதே அடிப்படையில் தான் தற்போதும் கூட கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழக்கின்ற ஜனாஸாக்களை  எரித்தே ஆக வேண்டும் என்ற  நிபுணர் குழுவின் பரிந்துரையும் ஒரு  சதியாகவே எங்களால் பார்க்கப் படுகின்றது. இவ்வாறான நிலமை இனியும் நீடித்து உங்கள் நற்பெயரை பாதிக்க அனுமதிக்கப்படக் கூடாது.
சிறுபான்மை சமூகத்தினது உரிமைகளையும் பாதுகாத்து அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்ற போதுதான் இந்நாட்டின் நற்பெயர் சர்வதேசத்தில் பாதுகாக்கப்படும்
எனவே  ராஜபக்ச குடும்பத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அப்பாவி முஸ்லிம்களையும் தலைவர்களையும் பழி வாங்குகின்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்காமல் அவ்வாறான சூத்திரதாரிகளை கட்டப்படுத்தி சட்ட நடவடிக்கையும் எடுக்கின்ற போது ராஜபக்ச குடும்பத்தினருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான நம்பிக்கையை மீண்டும் பலப்படுத்தி இடைவெளியை குறைக்க முடியுமென முன்மொழிந்து இவ்விடயங்களில் உங்கள் மேலான கரிசனை காட்டப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.