தொழிலாளர்களின் நலன்கருதி மட்டக்களப்பு மாநகர சபையினால் மழை அங்கிகள்

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் பொதுமக்களுக்கான பணிகளை முன்னெடுத்துவரும் மாநகர தொழிலாளர்களின் நலன்கருதி மட்டக்களப்பு மாநகர சபையினால் மழை அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபையின் வேலைத் தொழிலாளர்களுக்கு மழை அங்கிகளை வழங்கும் நிகழ்வானது இன்று(22.12.2020) நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினை கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றும்  ஊழியர்களின் நலன் கருதியும், ஊழியர்களை பொதுமக்களுக்கு இலகுவாக அறிமுகப்படுத்தும் வகையிலும் மட்டக்களப்பு மாநகர சபையினால் சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

மாநகர ஆணையாளர் மா.தயாபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர பிரதி முதல்வர் க .சத்தியசீலன், வேலைகள் மற்றும் திட்டமிடல் நிலையியற் குழுவின் தலைவர் வி.பூபாலராஜா, மாநகர சபையின் உறுப்பினர்களான த. இராஜேந்திரன், க.ரகுநாதன், மாநகர பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மாநகர பொறியியலாளர் திருமதி. சித்திரதேவி லிங்கேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கான மழை அங்கிகளை வழங்கி வைத்தனர்.

பொதுமக்களுக்கான சேவைகளை துரிதமாக முன்னெடுப்பதற்கும், ஏனைய திணைக்களங்களுக்கு முன்மாதிரியாக செயற்படுவதற்கும்  உறுதுணையாக இருந்த மாநகர சபையின் தொழிலாளர்களுக்கு தமது நன்றிகளை தெரிவித்த மாநகர முதல்வர். அர்ப்பணிப்பான சேவையால் மட்டக்களப்பு மாநகர சபைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயரினையும் ஈட்டித்தரும் தொழிலாளர்களின் நன்மைகருதி பல்வேறு உதவித்திட்டங்களையும் முன்னெடுத்துவருவதாகவும் சுட்டிக் காட்டினார்.