காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டம் தொடர்பான கலந்துரையாடல்.

ச.தவசீலன்

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் உலக வங்கியின் நிதி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டம் தொடர்பான கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் 17-12-2020 அன்று  மு.ப 10.00 மணிக்கு முல்லைத்தீவு  மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

கால நிலைக்கு ஏற்றவகையில் விவசாய நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதனை நோக்காகக் கொண்ட குறித்த திட்டமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டிசுட்டான், துணுக்காய் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் மாவட்டத்தில் மண்டைக்கல் ஆறுடன் இணைந்ததாக 06குளங்களும் மற்றும் பேராறினை உள்ளடக்கியதாக 97குளங்களுமாக 103 குளங்கள் இத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் குறித்த திட்டத்தின் கடந்தகால முன்னேற்றங்கள் தொடர்பாக வேலைத் திட்டங்களுக்குரிய திணைக்கள அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், திட்டத்திற்குரிய மாகாண பிரதிப்பணிப்பாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர், உதவிப் பிரதேச செயலாளர்கள், வனஜீவரசிகள், கால்நடை அபிவிருத்தி, தொல்பொருள், விவசாய  திணைக்களின் உதவிப்பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்துகொண்டனர்.