அடுத்த தலைமுறைக்கு பசுமையை கையளிப்போம் செயல்திட்டம் மட்டக்களப்பில் முன்னெடுப்பு.

பற்று மற்றும் தூயதுளிர் அமைப்பினர் இணைந்து அடுத்த தலைமுறைக்கு பசுமையை கையளிப்போம் எனும் செயற்திட்டத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் பயன்பாடின்றி இருக்கும் நிலங்கள் முழுவதும் 5000 பனை விதைகள் மற்றும் 500 வேம்பு மர நடுகை இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் தூயதுளிர் அமைப்பின் செயலாளரும், பற்று அமைப்பின் ஸ்தாபகருமான யோகநாதன் விஜயலக்ஸ்மணன் தலைமையில் அமைப்பின் நிருவாக உறுப்பினர்கள் சகிதம் கலந்து கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பயன்பாடின்றி இருக்கும் நிலங்களில் பனை விதைகள் மற்றும் வேம்பு மரங்களை நடுகை செய்தனர்.

குறித்த திட்டம் தொடர்பில் தூயதுளிர் அமைப்பின் செயலாளரும், பற்று அமைப்பின் ஸ்தாபகருமான யோகநாதன் விஜயலக்ஸ்மணன் கருத்து தெரிவிக்கையில்-

மரங்கள் நடுகை என்பது வெறுமனே வாழும் சமுதாயத்துக்கு மட்டுமல்ல இனி வரப்போகும் சமுதாயத்துக்குமானது. தலைமுறைகள் கடந்து அதன் பயன்தரும் தாக்கம் இருக்கும். பனை மற்றும் வேம்பு பல்லாயிரம் வருடங்களாக தமிழர் பண்போடும் கலாச்சாரத்தோடும் மருத்துவத்தோடும் பின்னிப்பிணைந்த மரவகைகளாகும்.

வேம்பு மரத்தின் அனைத்துப்பாகங்களும் மருத்துவ குணம் செறிந்து காணப்படுவதோடு பண்டைய வாழ்வியலோடும் இறைவழிபாட்டோடும் இயற்கை மருத்துவத்தோடும் தொடர்புடையது. வளிமண்டலத்தில் காணப்படும் அதிகளவான காபனீர்ஒக்சைட்டை உள்ளெடுத்து மனித சுவாசத்திற்கு தேவையான அதிகமான ஒக்சிஜனை வெளியிடுவதில் வேம்பின் பங்கு அதிகம். இதனால் வளிமண்டல சுத்திகரிப்புக்கு வேம்பு இன்றியமையாதது.

பனை எப்பசியினையும் போக்கும் கற்பகத்தரு என்பது முன்னோர் வாக்காகும். பனை நார் வேர் தொகுதியைக் கொண்டிருப்பதனால் அதன் வேர்கள் மண்ணை இறுக பற்றிப் பிடிக்கின்றன. இதனால் மண்ணரிப்பிலிருந்து நிலம் பாதுகாக்கப்படுகின்றது. நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் ஆற்றல் இதன் வேர்களுக்கு உண்டு என்கின்றனர் பனை வல்லுநர்கள்.பனை வேர்களில் அதிகளவான தண்ணீர் தேங்கி நிற்பதனால், நிலத்தடி நீர் மட்டம் எப்போதுமே கீழிறங்காது பாதுகாக்கபடும். 100 பனை மரங்கள் சேர்ந்தால் ஒரு காடே உருவாகி விடும் என சொல்வார்கள் அவ்வாறு உருவாகும் பனை மரங்களின் கூட்டமுள்ள இடங்களில் உயிர்ப்பல்வகைமை பெருகிவிடும் வாய்ப்பும் அதிகமாகும் எனவும் கூறினார்.

இதன் அடிப்படையில் பயன்பாடின்றி இருக்கும் நிலங்கள் முழுவதும் பனம் விதைகளையும் வேம்பு மரங்களை நாட்டி வளிமண்டத்தையும், மண் வளத்தையும் உயிர் பல்வகமையை பேணுவதோடு சுத்தமான காற்றையும் நிலத்தடி நீரின் இருப்பையும் உறுதி செய்ய எல்லோரும் சேர்ந்து இத்திட்டத்தை வெற்றி அடையச் செய்ய அர்பணிப்போடு செயலாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.