மட்டு நகரில் 7 மில்லியன் ரூபா செலவில் இளைப்பாற்று நிலையம்.

வெளியிடங்களிலிருந்து மட்டக்களப்பு மாநகருக்குள் வருகைதரும் பிரயாணிகளின் நன்மை கருதியும் சுற்றுலா துறையை  ஊக்குவிக்கும் விதத்திலும் உணவக வசதிகளுடன் கூடிய இளைப்பாற்று நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வானது இன்று (17) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களின் 1000 நாள் வேலைத் திட்டத்தின் கீழ்  நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப்பங்களிப்புடன் மட்டக்களப்பு தனியார் பேருந்து தரிப்பிட வளாகத்தில் அமையபெறவுள்ள 7 மில்லியன் பெறுமதியான இளைப்பாற்று நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வானது மாநகர பொறியியலாளர் சித்திரதேவி லிங்கேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க. சத்தியசீலன், மாநகர சபையின் உறுப்பினர்களான  மா.ரூபாகரன், வே.தவராஜா, த.இராஜேந்திரன், சிவம் பாக்கியநாதன், சசிகலா விஜயதேவா, ஐ.சிறீதரன் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வெளிநாடுகளிலிருந்தும், வெளியிடங்களிலிருந்தும் மட்டக்களப்பு மாநகருக்குள் வருகை தரும் பிரயாணிகளின் நன்மைகருதியும், உல்லாசப் பிரயாணிகள் மட்டு வாவியின் அழகினை ரசிக்கக் கூடிய வகையிலும் மேற்படி இளைப்பாற்று நிலையமானது வடிவமைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தெரிவித்தார்.

அத்துடன் இதற்கு மேலதிகமாக பிரயாணிகளுக்கான குளியலறை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஓய்வறை, உணவகங்களுக்கான இட ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பொழுதுப்போக்கு அம்சங்களும் இக் கட்டிடத் தொகுதிக்குள் உள்ளடங்குவதாகவும் இதன் ஊடாக பயணிகளின் சிரமங்களை குறைப்பதோடு உல்லாச பிரயானத்துறையையும் ஊக்குவிக்க கூடியாதாகவிருக்கும் எனவும் மேலும்  தெரிவித்தார்.