அட்டாளச்சேனை சுகாதாரப்பிரிவில் அமுல்படுத்தப்படும்நடைமுறைகள்.

சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.அகிலன்
பைஷல் இஸ்மாயில் –
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்கு உட்பட்ட மூன்று கிராமப் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுலிலிருக்கும் இருக்குமென அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது பிரதேச காரியலய பிரிவில் உள்ள அட்டாளைச்சேனை – 8, பாலமுனை – 1, ஒலுவில் – 2 ஆம் கிராமப் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலிருக்கும்.
எமது பிரதேச சுகாதாரப் பிரிவில் உள்ள அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், தீகவாபி, திராய்க்கேணி பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மறுஅறிவித்தல் வரும்வரை திறக்கப்பதற்கு அனுமதி இல்லை.
அத்துடன் தேனீர்க் கடைகள், சலூன் கடைகள் மற்றும் அலங்காரக் கடைகள் திறக்க முடியாது. மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் ஏனைய நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்நிறுவனங்கள் கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். எமது சுகாதாரப் பிரிவினர் திடீர் விஜயம் மேற்கொண்டு பரிசோதனைகளின்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத வியாபாரிகளுக்கு ஏதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரச அலுவலகங்கள் இயங்கும் அத்துடன் வெளிப் பிரதேசங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கடமைகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமண வைபவங்கள், விழாக்கள், கூட்டங்கள், விளையாட்டுக்கள், நண்பர்கள் ஒன்று சேர்ந்து சந்திகளில் கூட்டமாக நிற்பது முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்.
அட்டாளைச்சேனை-8, பாலமுனை – 1, ஒலுவில் – 2 ஆகிய கிராமப் பிரிவுகளில் கடைகள் எதுவும் திறக்க முடியாது. இக்கிராமப் பிரிவுகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
எது எப்படி இருந்தும் எமது பிரதேசத்தில் கொரோனா பரவல் இருப்பதனால் மக்களின் அத்தியாவசியத் தேவைகளையும், வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு தனிமைப்படுத்தல் சற்று தளர்த்தப்பட்டுவதனால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அனைவரும் செயற்பட வேண்டும்.
இதன் மூலம் தங்களது குடும்பங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
எமது பிரதேச சுகாதாரப் பிரிவில் தற்போது 59 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு சிகிச்சையின் பின் தற்போது 20 பேர் பின் வீடு வந்துள்ளனர். அத்துடன் ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனைப் பிரதேசங்களில் 630 பேர் இதுவரை சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர்.
ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியலய எல்லைக்கு உட்பட்ட அக்கரைப்பற்று – 8 / 1 , அக்கரைப்பற்று – 8/3, அக்கரைப்பற்று – 9 ஆகிய மூன்று கிராமப்பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலலிருக்கும் என டாக்டர் எஸ்.அகிலன் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எல்லைக்கு உட்பட்ட அக்கரைப்பற்று -5 ,அக்கரைப்பற்று -14 , அக்கரைப்பற்று நகரப் பிரிவு -3 ஆகிய கிராமப்பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்குமென அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறுாசா நக்பர் தெரிவித்தார்.