கல்முனையில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்; பொதுச் சந்தையும் முடக்கம்; வீதிகள் வெறிச்சோட்டம்

(அஸ்லம் எஸ்.மௌலானா, எஸ்.அஷ்ரப்கான்,சர்ஜுன் லாபீர்)

கல்முனை செய்லான் வீதி தொடக்கம் மாதவன் வீதி வரையான பிரதேசங்கள் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இப்பிரதேசங்களிலுள்ள வீதிகள் யாவும் சனநடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

கல்முனை மாநகர சபையில் புதன்கிழமை (16) இரவு, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற அவசர உயர்மட்டக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

புதன்கிழமையன்று கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடற்கைரைப்பள்ளி வீதியை மையப்படுத்திய பகுதிகளில் 90 பேருக்கு எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் 14 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகளின் வேண்டுகோளின் இந்த அவசரக் கூட்டம் மாநகர முதல்வரினால் கூட்டப்பட்டிருந்தது. இதன்போது கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ள கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகள் குறித்து ஆராய்யப்பட்டன.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் கொவிட் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில், கல்முனை செய்லான் வீதி தொடக்கம் மாதவன் வீதி வரையான பிரதேசங்கள் நேற்று வியாழக்கிழமை காலை 6.00 மணி தொடக்கம் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து, இப்பிரதேசங்களை சேர்ந்த பொது மக்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறுவதற்கோ இப்பகுதிகளினுள் எவரும் உள்நுழைவதற்கோ அனுமதிக்கப்படவில்லை. இதனால் இப்பிரதேசங்களில் வீதிகள் யாவும் வெறிச்சோடிக் காணப்பட்டன. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது தனிமைப்படுத்தப்பட்ட இப்பிரதேசங்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் உறவினர்கள் மற்றும் தொடர்புடையவர்களுக்கும் எழுந்தமானமாகவும் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேவேளை, மேற்படி உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் கல்முனை பொதுச் சந்தையும் நேற்றைய தினம் முடக்கப்பட்டிருந்தது.