கல்முனை பிரதேச செயலகம் முடக்கப்படவில்லை

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை பிரதேச செயலகம் முடக்கப்பட்டிருப்பதாக முகநூலில் பரப்பப்படும் வதந்திகளில் உண்மையில்லை என பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

கல்முனை பிரதேச செயலகம் இன்று புதன்கிழமை தொடக்கம் முடக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமையே திறக்கப்படும் எனவும் சிலர் முகநூல்களில் பதிவிட்டுள்ளனர். இது வெறும் புரளியாகும். அப்படியான தீர்மானம் எதுவும் எம்மால் மேற்கொள்ளப்படவுமில்லை.

கொவிட் நோயாளி ஒருவர் எமது பிரதேச செயலகத்திற்கு வந்து சென்றிருப்பதாக அறியக்கிடைத்ததையடுத்து எமது அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற 03 உத்தியோகத்தர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே எமது செயலக நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும்.

எவ்வாறாயினும் வேறு சில உத்தியோகத்தர்களும் இன்று புதன்கிழமை கடமைக்கு இன்று சமூகமளிக்கவில்லை. இதனால் எமது செயலகப் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் இடம்பெறுகின்றன. ஆனால், அலுவலகம் முடக்கப்படவில்லை” என்றார்