அம்பாறை மாவட்டத்தில் கொவிட் பாதுகாப்பு நடைமுறைகள் இறுக்கமான நிலையில்

திருக்கோவில்  நிருபர்-எஸ்.கார்த்திகேசு)
அம்பாறை மற்றும் கல்முனை சுகாதார பிராந்தியங்களில் அதிகரித்து செல்லும் கொரோனா தொற்றாளர்கள் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொலிசார் கொவிட் 19 சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளில் இறுக்கமான கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் மசூத் தலைமையிலான கொவிட் சுகாதார பாதுகாப்பு குழுவினர் மிக தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தனர்.

இதன்போது சமுக இடைவெளிகளை கருத்தில் கொண்டு வர்த்தக நிலையங்கள் கண்காணிக்கப்பட்டு வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் கயிற்றினால் எல்லைகள் இடப்பட்டதோடு பொது மக்கள் கயிற்றுக்கு வெளியில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

இதேவேளை திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒன்பதாக அதிகரிக்கதுள்ளதுடன் பொது இடங்களில் மக்களின் நடமாட்டங்களும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்ததுடன் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் கொரோனா சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின் பற்றி செயற்படுவதையும் அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் அம்பாறை பிராந்தியத்தில் 20 நபர்களும் கல்முனை பிராந்தியத்தில் 420 நபர்களுக்குமாக 440 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறையில் ஒரு நபர் உயிர் இழந்துள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் உத்தியோகபூர் அறிக்கைகளின் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கல்முனை பிராந்தியத்தில் எல்லைக்குட்பட்ட அக்கரைப்பற்று பொலிஸ்ப் பிரிவில் 18வது நாளாகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.