இராஜாங்க அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர மட்டக்களப்பிற்கு விஜயம்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
பற்றிக், கைத்தறி மற்றும் உள்ளுர் அடை வடிவமைப்பு இராஜாங்க அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கைத்தறி மற்றும் உள்ளுர் ஆடை வடிவமைப்பு உற்பத்தி தொடர்பான விடயங்களை கண்கானிக்க விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் ஓர் அங்கமாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கருணாகரனை சந்திக்கும் நிகழ்வொன்று  நேற்று (11) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்களுக்கான இணைப்பாளர் வினாயகமூர்த்தி முரளிதரன், மேலதி அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, கிழக்கு மாகாண தொழில்துறைத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கே. இளங்குமுதன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே. தயாபரன் உட்பட பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இதன்போது இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கைத்தறி, பிடவைக் கைத்தொழில் மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி தொடர்பாகவும், அவற்றுக்கான சந்தை வாய்ப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதுதவிர இம்மாவட்டதில் கடந்த காலங்களில் இயங்கி வந்த கைத்தறி நெசவு நிலையம் மூடப்பட்டு அம்பாரை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளமை மற்றும் அதனை மீள புனரமைத்து புதிய வடிவமைப்புடன் ஆரம்பிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் இத்தொழில் தொடர்பான பயிற்சிகளை பெண்களுக்கும் குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குமாக வழங்கி சுயதொழில் வாய்ப்பினை அதிகரிக்கச் செய்து அவர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்படத்தக்கது