திண்மக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றமும் நோயும் ஏற்படுவதாக மக்கள் புகார்.

(றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர் )
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட நற்பிட்டிமுனை கிராமத்தின் மூன்றாம் கிராம சேவகர் பிரிவு குடியிருப்புக்கு முன்னால் உள்ள  தலைவர் அஷ்ரப் விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் உள்ள பாதையிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் இனந்தெரியாத நபர்களால் இரவு நேரங்களில் திண்மக் கழிவுகளையும் குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டுவதனால் பாதைகள் இருக்கின்ற தடம் கூடத் தெரியாமல் காணப்படுவதுடன் இந்த மழை காலப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் நோய்களும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
இதன் அருகாமையில் பொது நிறுவனங்களான மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் மற்றும் லாபீர் வித்தியாலையம் போன்றன காணப்பட்டும் அவைகளை கருத்திற் கொள்ளாது செயற்படுகிறார்கள்.
இதன் மூலம் துர்நாற்றம் வீசுவதுடன் டெங்கு மற்றும் வாந்திபேதி போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆகவே உரிய அதிகாரிகள் குற்றம் செய்யும் நபர்களை கண்டறிந்து தண்டனை வழங்குவதுடன் குறிப்பிட்ட பிரதேசத்தை பார்வையிட்டு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் என பொது மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.