அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கும் நிவாரணப் பொருட்களின் எடைகளில் மோசடி

பைஷல் இஸ்மாயில் –
த னிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அரசாங்க நிதியிலிருந்து மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் – எடை குறைவான அளவில் உள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
05 ஆயிரம் ரூபா பெறுமதியான 17 பொருட்களை, அரசாங்க நிதியிலிருந்து அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மக்களுக்கு வழங்கி வருகின்றது.
இவற்றில் சீனி, பருப்பு, கடலை மற்றும் கோதுமை மா உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் எடைகள், பிரதேச செயலகம் குறிப்பிட்டமைக்கும் குறைவாக உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோன்று 02 கிலோ கோதுமை மாவுக்கு பதிலாக 1915 கிராம் கோதுமை மாவு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு கிலோகிராம் பருப்பு வழங்கப்படும் என அறிவித்து விட்டு, 1905 கிராம் பருப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடலை 01 கிலோகிராம் வழங்குவதாக தெரிவித்துள்ள நிலையில், 955 கிராம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சீனியில் பெருமளவு மோசடி
மூன்று கிலோகிராம் சீனி வழங்குவதாக அறிவித்து விட்டு 2905 கிராம் சீனி வழங்கப்படும் போது, 95 கிராம் சீனி மோசடி செய்யப்படுகிறது.
இந்த மோசடியானது, நிவாரணம் வழங்கப்படும் 9107 குடும்பங்களிடமும் நடக்குமானால், 865165 கிராம் சீனி மோசடி செய்யப்படும். அதாவது, 865 கிலோ கிராமுக்கும் அதிகமான எடையுள்ள சீனி – மக்களுக்கு வழங்காமல் கையாடப்படும்.
இது இவ்வாறிருக்க, அக்கரைப்பற்று பிரதேச செயலகம் மக்களுக்கு வழங்கும் நிவாரணத்தில் 129 ரூபாவுக்கு பிறவுன் சீனியை வழங்குகின்றது. ஆனால், அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் 129 ரூபாவுக்கு வெள்ளைச் சீனியை வழங்குகின்றமை மற்றுமொரு மோசடியாகும்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்: எரியும் வீட்டில் பிடுங்குகிறதா?
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் தொடர்பில் கடந்த காலங்களிலும் பல்வேறு ஊழல் மற்றும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ள நிலையிலேயே, தற்போது மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்களிலும் கையாடல் நடந்துள்ளது.
இது இவ்வாறிருக்க மேற்படி நிவாரணப் பொருட்களை அக்கரைப்பற்று பிரதேச செயலகம் வழங்கும் விலையுடன் ஒப்பிடும் போது, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் 10 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையினை தமது விலைப்பட்டியலில் அதிகமாகக் காண்பித்துள்மையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் ஏற்கனவே விரிவான செய்தியொன்றினை புதிது வெளியிட்டுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள 9107 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக அரசாங்கம் 91 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையினை ஒதுக்கியுள்ளது.
தொடர்பான செய்தி:
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்; அதிக விலையில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குகின்றமை அம்பலம்: 21 லட்சம் ரூபாவுக்கு ‘மண்’ மக்களுக்கு வழங்கப்படும் மேற்படி நிவாரணப் பொருட்களில் 03 கிலோகிராம் சீனி உள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் அறிவித்துள்ள போதும், குறித்த பொதியினும் 2905 கிராம் எடையுள்ள சீனியே காணப்படுகின்றது.
இதேவேளை இந்த நிவாரண நடவடிக்கையின் போது மக்களுக்கு ஒரு கிலோகிராம் சீனியை 129 ரூபாவுக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்குகிறது. இதன்படி பார்த்தால் மோசடி செய்யப்படும் 865 கிலோகிராம் சீனிக்குமான பெறுமதி 01 லட்சத்து 16 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமானதாகும்.