கவிஞர் வாலி விருது பெறவுள்ளார் கவிஞர் ஓட்டமாவடி றியாஸ்

(எச்.எம்.எம்.பர்ஸான் )

கவிஞர் ஓட்டமாவடி றியாஸ் கவிஞர் வாலி விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார்.

கவிஞர் வாலி கலை மற்றும் இலக்கிய அறக்கட்டளையால் வழங்கப்படும் (2019- 2020) ஆண்டுக்கான கவிஞர் வாலி விருது பட்டியலில் கவிஞர் ஓட்டமாவடி றியாஸ் அவர்களின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25.12.2020ம் திகதி சென்னையில் இடம்பெறும் விழாவில் குறித்த விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார்.

வாழைச்சேனை 04 கொமைனி வீதியில் வசித்து வரும் கவிஞர் றியாஸ் தடாகம் மின்னிதழின் முன்னாள் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

“முகவரி இழந்த முச்சந்தி” எனும் இவரது முதல் கவிதை நூல் 2016 ம் ஆண்டு 2 ம் மாதம் 28 ஆம் திகதி சொந்த மண்ணில் வெளியீடு செய்யப்பட்டது.

அந்த நூலின் அறிமுக விழா மலேசியா கோலாலம்பூரில் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

கவிஞர் றியாசுக்கு மலேசியா சிரம்பான் மாநில எழுத்தாளர் மாநாட்டில் கவிச்சுடர் விருது, 2015 ஏப்ரல் 15 ம் திகதி இந்தியாவில் இருந்து வெளியாகும் வல்லமை மின்னிதழ் கவிதைகளுக்காக வல்லமையாளர் விருது மற்றும் கொழும்பு தமிழ் சங்கத்தில்
மறைந்த கல்விமான் எஸ்.எச்.எம் ஜெமில் அவர்களின் ஞாபகார்த்த விருது, தடாகம் கலை இலக்கிய சர்வதேச அமைப்பின் கவியருவி பட்டமும் சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, கலாசார அலுவல்கள் திணைக்களம், மற்றும் மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், ஆகியவற்றின் அனுசரணையில், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகம் நடாத்திய பிரதேச கலாச்சார விழாவில் (2017) ஆண்டுக்கான
வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கான பாராட்டும், கெளரவமும் கிடைத்தது.

கரவாகு இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் 2015 ஆண்டிற்கான கவிதை நூலுக்கான “சோலைக்கிளி” விருது
இவரது கவிதை நூலுக்குக் கிடைத்தது.

2016 டிசம்பர் 13 ம் திகதி கொழும்பில் நடை பெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு பொன் விழாவில் இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதேபோன்று 2015 இல் திருகோணமலையில் நடந்த தடாகம் கலை இலக்கிய வட்டமும் கனடா படைப்பாளிகள் அமைப்பினரும் இணைந்து நடாத்திய மாபெரும் இலக்கிய விழாவில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.