வறுமையான மாவட்டமாக காணப்படும் மட்டக்களப்பினை வறுமையில் இருந்து மீட்டெடுக்க சமுர்த்தி முகாமையாளர்கள் அற்பணிப்புடன் செயற்படவேண்டும் அரசாங்க அதிபர் கருணாகரன் வேண்டுகோள்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையில் வறுமையான மாவட்டமாகக் காணப்படுகின்றது. இம்மாவட்டத்தினை வறுமையிலிருந்து மீட்டெடுக்க சமுர்த்தி முகாமையாளர்கள் அற்பணிப்புடன் செயற்படவேண்டும். வறுமையினை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சமுர்த்தி திட்டத்தினூடக இதனை சாதிக்க முடியும். எனவே பொதுமக்களின் முறைப்பாடுகள் கிடைக்கபெறாதவாறு அவர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற அனைத்து சமுர்த்தி முகாமையாளர்களும் துரிதமாக செயற்பட வேண்டுமென அரசாங்க அதிபர் கே. கருணாகரன் வேண்டுகோள் விடுத்தார்.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்களுக்கான கூட்டம் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கருணாபரன் தலைமையில் இன்று (10) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இதன்போது சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் இவ்வாண்டில் நடைமுறைப் படுத்தப்பட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் தொர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
இதுதவிர ஒன்லைன் வங்கி சேவையினை வழங்கிவரும் புளியந்தீவு, கல்லடி மற்றும் ஆரையம்பதி சமுர்த்தி வங்கிகளுக்கு மேலதிகமாக மாவட்டத்திலுள்ள அனைத்து சமுர்த்தி வங்கிகளும் இவ்வாண்டு இறுதிக்குள் ஒன்லைன் வங்கி சேவையினை நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திருமதி. ஏ. பாக்கியராஜா, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட கணக்காளர் எஸ்.எம். பஸீர், மாவட்ட தலைமை முகாமையாளர் ஜே.எப். மனோகிதராஜ் மற்றும் பிரதேச செயலகப் பிரிவில் கடமையாற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கள், வங்கி முகாமையாளர்கள், திட்ட முகாமையாளர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.