றிதிதென்ன கிராமத்தில் வாழும் சிலரது பெயர்கள் இம்முறை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்  

(ஏறாவூர் நிருபர் )

மட்டக்களப்பு மாவட்டம் றிதிதென்ன கிராமத்தில் வாழும் சிலரது பெயர்கள் இம்முறை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல்கள் உதவி ஆணையாளர் மற்றும்  மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளரிடம் முறையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட பகுதிக்கான கிராம அலுவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது சம்பந்தப்பட்ட  நபர்கள் குறித்தகாலப்பகுதியில் அந்த இடத்தைவிட்டு வெளியேறி வேறுஇடங்களில் குடியிருப்பதனால் அவர்களது பெயர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும் அவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோர் முன்னிலையில் தமது குடியிருப்பினை உறுதிப்படுத்தும் பட்சத்தில் அதற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியுமெனக் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பான விபரங்களை அறிவதற்கு பிரதேச செயலாளரிடம் தொலைபேசிமூலம் பல தடவைகள் தொடர்புகொண்டபோதிலும் அவர் பதிலளிக்கவில்லை.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபர்கள் தாம் றிதிதென்ன கிராமத்தில் 1990 ஆம் ஆண்டுமுதல் நிரந்தரமாக வசித்துவருவதாகவும் இதுகாலவரை நடைபெற்றுள்ள தேர்தல்களில் றிதிதென்ன கிராமத்திலேயே வாக்குப்பதிவு செய்ததாகவும் கூறுகின்றனர்.
இதேவேளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக றிதிதென்ன பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டபோது அரசாங்கத்தின் நிவாரண உதவிகள்  அப்பிரதேசத்தில் அதே கிராம சேவை அதிகாரி மூலமாகவே வழங்கப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
எனினும் தமது பிள்ளைகளின் கல்வி வசதிக்காக ஏறாவூருக்குச் சென்று வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இதேநேரம்  தமது பெயர்கள் வாக்காளர் இடாப்பில் நீக்கப்பட்டமை குறித்து முறையீடுசெய்வதற்கு பல தடவைகள் கிராம அலுவலரிடம்  சென்றவேளைகளில் தாம் அலைக்கழிக்கப்பட்டபட்டதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.