துணுக்காய் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஆறு குளங்களுக்கு மீன்குஞ்சுகள் விடும் திட்டம் ஆரம்பித்து வைப்பு

சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆறு குளங்களுக்கு மீன்குஞ்சுகள் விடுகின்ற செயல்திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தேறாங்கண்டல்குளம், ஐயன்கன்குளம், ஆலங்குளம், அம்பலப்பெருமாள்குளம், தென்னியன்குளம், கோட்டைகட்டியகுளம் ஆகிய ஆறு குளங்களுக்கும் தலா ஒன்றரை இலட்சம் மீன் குஞ்சுகளை விடுகின்ற செயல்திட்டத்தை உலக உணவுத்திட்டம் முன்னெடுத்துள்ளது
இதன் முதல் கட்டமாக இன்றைய தினம் தேறாங்கண்டல் குளத்தில் 75 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டு இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
துணுக்காய் பிரதேச செயலாளர் ஆ.லதுமீரா அவர்களுடைய தலைமையில் இடம்பெற்ற குறித்த திட்டத்தை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்  ஆரம்பித்து வைத்தார்
குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி முகாமையாளர், துணுக்காய் பிரதேச செயலாளர், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர், உலக உணவு திட்ட அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்
Koica நிறுவனத்தின் நிதிஅனுசரனையில் உலக உணவுத் திட்டம் மற்றும் NAQDA நிறுவனம் இணைந்து இச் செயல் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. தொடர்ச்சியாக ஏனைய குளங்களுக்கும் இந்த மீன்குஞ்சுகள் விடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது