அக்கரைப்பற்றில் இறுக்கமான கண்காணிப்பு.பொலிசாரும் , இராணுவத்தினரும் முழு நேர கண்காணிப்பில்

நூருல் ஹுதா உமர்

எமது மக்களின் நலனையும் , எதிர்காலத்தையும் , தேங்கி நிற்கும் பொருளாதாரத்தையும் வழமை நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்றால் , “நிலைமை கட்டுப்பாட்டில் வரும்வரை மிகவும் இறுக்கமான ஒரு நடைமுறையை அமுல்படுத்துவது தவிர்க்க முடியாது” என்பதால், இப்போது முதல் எமது பிராந்தியத்தில் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் .அதற்காக பொலிசாரும் , இராணுவத்தினரும் முழு நேர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்பதை மாநகர மக்களுக்கு அறிவிக்கின்றேன் என அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் ஸக்கி மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்றின் சமகால நிலைகள் தொடர்பில் மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ள அவர், தொடர்ந்தும் தன்னுடைய அறிவித்தலில்,

சுகாதாரத்துறையினருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் கவலை தருபவையாக இருக்கின்றது.
மக்கள் தொடர்ச்சியாக கவனயீனமாக நடந்து கொண்டிருக்கின்றனர், நிலைமையை சிரமேற்றி கட்டுப்பாடுடன் செயற்படவில்லை, என்ற பரவலான ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன .

எமது உள் ஊரில் சில தினங்களாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட பலர், தொற்றுக்கு உள்ளாகி இருப்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.முறையாக பரிசோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட முறையில் வியாபார நடவடிக்கைகளில் செயற்படுகின்றவர்கள் ,
தங்களை எந்த நேரமும் உறுதிப்படுத்தும் வகையில் ஆதாரங்களை உடன் வைத்திருக்க வேண்டும் .

அவசியம் ஏற்படுமிடத்து பொதுமக்கள் தாராளமாக இவர்களை பரிசோதித்து கொள்ளலாம். ஏனையவர்கள் தயவுசெய்து வியாபார நடவடிக்கைகளில் இருந்து நிலைமை சீராகும் வரை விலகி இருக்க வேண்டும்.மக்கள் இச் செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதோடு, தொடர்சியான சுகாதார நடைமுறைகளையும் , வழிகாட்டல்களையும் பின்பற்றி எமது பிராந்தியத்தை விடுவித்துக் கொள்ள ஒத்துழைக்குமாறு கேட்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.