கல்முனைப் பிராந்தியத்தில் 221 கொவிட் தொற்றாளர்கள்

எம்.ஏ.றமீஸ்)
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 221 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நேற்று(05) மாத்திரம் இப்பிராந்தியத்தில் 13 பேர் புதிதாக தொற்றாளர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
இதற்கமைவாக, அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஒரே நாளில் புதிதாக 06 பேருக்கும், சம்மாந்துறை பிரதேசத்தில் ஐவருக்கும், அட்டாளைச்சேனை மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் இருந்து தலா ஒவ்வொருவரும் இந்நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இதுவரை தொற்றுக்குள்ளான 221 பேரில் 23 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இப்பிராந்தியத்தில் இதுவரை 4482 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும், 2386 பேரிடம் அன்ரிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பிராந்தியத்தில் தற்போது 196 பேர் கொவிட் நோய்க்கான சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர்.
கொவிட் சிகிச்சை நிலையமான பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் தற்போது 80 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வைத்தியசாலையில் இதுவரை 146 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
ஒலுவில் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தற்போது 72 பேரும், அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையத்தில் 80 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இப்பிராந்தியத்தில் உள்ள இவ்விரு தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் 152 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டும் வருவதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணம் மேலும் தெரிவித்தார்.