மட்டக்களப்பு கல்வி வலய ஆசிரியர் இடமாற்ற சபையில் இருந்து இலங்கை ஆசிரியர் சங்கம் வெளிநடப்பு.

எஸ்.சபேசன்
2020.12.04 அன்று மட்டக்களப்பு கல்வி வலயத்தில் நடைபெற்ற வலய ஆசிரியர் இடமாற்ற சபையானது தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கு முரணாக நடைபெறுவதை இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் இடமாற்ற சபையிலிருந்து வெளியேறியதாக ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
2007\20 கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கும் 1914\8 இலக்கமிடப்பட்டுள்ள அதிவிசேஷமான வர்த்தமானிப் பத்திரிகையின் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளை மீறி வெளிப்படைத்தன்மையற்ற இடமாற்ற சபையை வலயக்கல்விப் பணிப்பாளர் ஒழுங்கு செய்ததை வன்மையாகக் கண்டித்து இடமாற்ற சபையிலிருந்து வெளியேறியதாகவும் மாகாணக் கல்விப் பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை தெளிவுபடுத்தியதாகவும் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு கல்வி வலய ஆசிரியர் இடமாற்ற சபையில் உதவிக் கல்விப் பணிப்பாளர் (பாடத்துறை), ஆசிரியர் ஆலோசகர்கள் அங்கம் வகிப்பதற்கு தமது ஆட்சேபனையைத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் 2007\20 இலக்கமிடப்பட்ட கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தில் பகுதி 7 இல் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதும் தொழிற்சங்க அனுமதியுடன் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கமைவாக மாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை வகுப்பதாயின் தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கு முரணாக இருக்கக் கூடாது என தெளிவுபடுத்தினார்.
கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் வலயமட்ட ஆசிரியர் இடமாற்ற சபையானது அரசாங்க ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளுக்கும், தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கும் முரணாக வலயக் கல்விப் பணிப்பாளர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைவாக நடைபெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
வினைத்திறனற்றதும், தலைமைத்துவமற்ற கல்வி அதிகாரிகள் பரீட்சையை மையமாகக் கொண்ட போட்டித்தன்மையுடன் கல்வி நிர்வாகம் செய்வதாகவும் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக உள்ளதாகவும் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொறுப்புக் கடமை, ஒளிவுமறைவற்ற வெளிப்படையான நிலை, சட்டவிதிகளை மதித்தல், சனநாயக சமூகம் ஒன்றிலுள்ள மனித உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற உயர்ந்த பண்புகள் மதிக்கப்பட்டு கிழக்கு மாகாண கல்விப் புலத்தில் திறமையானதும் பயன்தருவதுமான வினைத்திறனுள்ள கல்வி நிருவாகக் கட்டமைப்பு கட்டியெழுப்பப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.