கரையோரப்பகுதி  மக்கள் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு முகாம்களுக்குச் செல்லுமாறு கோரிக்கை

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்
பொன்ஆனந்தம்
புரவியை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. கரையோரப்பகுதி  மக்கள் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு முகாம்களுக்குச் செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

புரவி புயலை எதிர்கொள்ள கிழக்கு மாகாணத்தில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் முன்னெடுத்து ள்ளது.
விசேடமாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கு பாதிப்பின் அளவு அதிகமாக இருக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதால் பொதுமக்களது பாதுகாப்பை கருத்திற்கொண்டு பாதுகாப்பு நடைமுறைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
கிழக்கிலுள்ள பாடசாலைகளை பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் தயார்படுத்தியுள்ளதாகவும் கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் வெகுவிரைவில் அப்பாடசாலைகளுக்கு செல்லுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவிட் காலம் என்பதால் அதனையும் கருத்திற்கொண்டு ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஒரு வகுப்பறை விகிதம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக கரையோர பகுதியில் வசிப்பவர்கள் இன்னமும் அவரவர் வீடுகளிலேயே இருப்பதாகவும் அவர்களை கூடியவிரைவில் பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.