மட்டக்களப்பில் அருவி பெண்கள் அமைப்பு பெண்களுக்கு எதிரான வன்முறை இல்லாதொழிக்கும் 16 நாட்கள் விழிப்புணர்வு ஆரம்பம் –கனகராசா சரவணன்

கனகராசா சரவணன்
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை இல்லாதோழிக்கும் தினத்தையிட்டு மட்டக்களப்பு அருவி பெண்கள் அமைப்பு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 சாள் செயற்திட்டத்தில் மட்டக்களபில் பொது இடங்களில்  விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று திங்கட்கிழமை (30) மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது
அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான திருமதி மயூரி ஜனன் தலைமையில் இந்த விழிப்புணர்வு ஏற்பாடு மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டு பஸ்நிலையம் மற்றும் பொது இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டதுடன் பஸ்வண்டிகளில் ஸ்ரீக்கர் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்
இதன்போது அருவி பெண்கள் அமைப்பின் பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
அருவி பெண்கள் வலையமைப்பினால் சர்வதேச ரீதியாக கொண்டாடப்பட்டு வருகின்ற பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிக்கும் 16 நாள் செயற்திட்டத்தில் இன்று 06ம் நாளாகிய இன்றைய நாளிலே நாங்கள் இந்த செயற்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்.
தற்போது நாட்டில் மிகத் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் மத்தியில் நேரடியாகவும், பல நிகழ்வுகள் மூலமும் விழிப்புணர்வு செய்வது கடினமான காரியம் என்கின்ற காரணத்தினால் எது எவ்வாறாயினும் மக்களுக்கு இந்த சர்வதேச ரீதியான தினங்களை ஒட்டிய விழிப்புணர்வுகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு இன்றைய தினம் நாங்கள் மட்டக்களப்பு மாவட்டம் பூராக உள்ள மக்களுக்கு வன்முறைகள் தொடர்பாக தங்களை எவ்வாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
வன்முறை வரும்போது அவசியமாக தெரிந்திருக்க வேண்டிய சட்டங்கள் என்ன? வன்முறை வரும்போது தாங்கள் எவ்வாறு முறைப்பாடுகளை உரிய இடங்களுக்கு அறிவிப்பது தொடர்பாகவும், உடனடியாக தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வை நாங்கள் பதாதைகள் மூலமாகவும், பொது இடங்கள் அதாவது, பஸ் வண்டிகள், மக்கள் ஒன்று கூடும் சந்தைகள் போன்ற பல பொது இடங்களில் நாங்கள் காட்சிப்படுத்தும் ஒட்டிகள் மூலமாக இந்த விடயங்களை நேரடியாக மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல விரும்புகின்றோம்.
அதேபோன்று இந்த ஒவ்வொரு சாதாரண தனிமனிதனும், அதாவது ஒவ்வொரு பெண்களும் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை விடயங்கள் தொடர்பாகவும், வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய விடயங்கள்  தொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முதல் நோக்கமாகும் என்றார்
இவ் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் சுதர்ஷpனி சிறிக்காந், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாத்தா, மட்டு மாநகரசபை முதல்வர் தியாகராசா சரவணபவன்,உட்டபட பலர் கலந்து கொண்டனர்.