ஜனாஸா எரிப்புக்கெதிரான உச்ச நீதிமன்ற வழக்கு; நாளை வரை ஒத்திவைப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் நாளை செவ்வாய்க்கிழமை (01) காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான முருது பெர்னாண்டோ, பத்மன் சுரஷேன ஆகியோர் முன்னிலையில் இம்மனுக்கள் இன்று திங்கட்கிழமை காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. காலை 10.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை விசாரணைகள் இடம்பெற்றன.

இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், நிஸாம் காரியப்பர், பைஸர் முஸ்தபா மற்றும் விரான் கொரயா உள்ளிட்ட சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் உடல்கள் அனைத்தும் கட்டாயம் எரிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல், இரத்து செய்யப்பட்டு, அவரவர் சமய முறைப்படி இறுதிக்கிரிகைகள் மேற்கொள்ளப்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடக்கோரி, அதற்கான வாதங்களை முன்வைத்து, சமர்ப்பணங்களை செய்திருந்தனர்.

இம்மனுக்களை ஆட்சேபித்து கொவிட்-19 தொற்று நோயினால் உயிரிழக்கும் அனைவரினதும் உடல்கள் கட்டாயம் எரிக்கப்பட வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயரத்ன ஆஜராகியிருந்தார். பிரதிவாதியான சுகாதார அமைச்சர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரில்புள்ளே ஆஜராகியிருக்கிறார். இவ்விரு தரப்பினரும் கொவிட்-19 தொற்று நோயினால் உயிரிழக்கும் அனைவரினதும் உடல்கள் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் தொடர்ந்தும் எரிக்கப்பட வேண்டும் எனவும் இன, மத முன்னுரிமை அடிப்படையில் நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படக்கூடாது எனவும் வாதிட்டு, சமர்ப்பண்ங்களை முன்வைத்திருந்தனர்.