அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் மழையுடன்கூடிய காலநிலை; மேட்டுநில தோட்ட பயிர்ச்செய்கை பாதிப்பு

ஏ.எல்.எம். ஷினாஸ் (அம்பாறை) 

அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக தாழ்நில பிரதேசங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதுடன் மேட்டுநில பயிர்செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் கடந்த ஒரு வார காலமாக  மாலை வேளைகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக நாவிதன்வெளி, துறைநீலாவணை, துறைவந்தியமேடு, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற தாழ்நில பகுதிகள் வெள்ளநீரில் நிரம்பியுள்ளன.

இதனால் இப்பகுதிகளில் மேட்டுநில தோட்டப் பயிர்களான கத்தரி, வெண்டி, மிளகாய், பயற்றை, கீரை போன்ற பயிர்செய்கைகள் வெள்ளநீரில் அழுகி முற்றாக  சேதமடைந்துள்ளன.

மேட்டுநில தோட்டம் பயிர் செய்கை அதிக அளவில் பயிரிடப்படும் பிரதேசங்களாக துறைநீலாவணை, துறை வந்தியமேடு, நாவிதன்வெளி, பெரியநீலாவணை, காரைதீவு போன்ற பிரதேசங்கள்   காணப்படுகின்றன.

தற்போது பெய்து வரும் மழை காரணமாக இந்த மேட்டு நில போட்ட பயிர் செய்கையாளர்கள்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இப்பிரதேசங்களில் பயிரிடப்படும் உள்நாட்டு மரக்கறி வகைகளாக வெண்டி, கத்தரி, மிளகாய், பயற்றை உட்பட சில கீரை வகைகளும் பயிரிடப்பட்டு வருகின்றன.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இப்பயிர் செய்கைகள் மூலம் கிடைக்கும் வருமானங்களை கொண்டே இந்த மக்கள் தமது ஜீவனோபாயத்தை நிறைவு செய்து வருகின்றனர்.

ஜனாதிபதி மற்றும்  பிரதமர் ஆகியோரின் வீட்டுத் தோட்ட பயிர்செய்கைகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அதிகளவில் இந்த உள்ளுர் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் தற்போது கொரோன தொற்று நோய் அச்சுறுத்தல் காரணமாக இரசாயன மருந்துகள், உரம்வகைகளுக்கு அதிக விலைகளை கொடுத்து வாக்க வேண்டி உள்ளது என விவசாயி ஒருவர் சுட்டிக்காட்டினார்

இன்னிலையில் தற்போது பெய்து வரும் மழை மற்றும் கொரோனா தொற்றுநோய் போன்ற காரணங்களினால் இவர்களது பயிர்ச்செய்கை முற்றாக சேதமடைந்துள்ளன அத்துடன் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கும் தோட்ட விவசாய தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள தமக்கு மானிய அடிப்படையில் உதவுவதற்கு அரசு முன்வர வேண்டுமென்று இந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தோட்ட பயிர் செய்கை உற்பத்தி தற்போது குறைவடைந்துள்ளதால் பிரதேசங்களில் உள்ளூர் உற்பத்திகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. அத்துடன் சந்தைகளில் உள்ளுர் மரக்கறி வைகள் கூடிய விலைக்கு விற்கப்பட்டு வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.