கல்முனை வொலிவேரியன் கிராம வீதிகள்   டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடமாக  உள்ளது. 

(ஏ.எல்.எம். ஷினாஸ்)  


டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடமாக சாய்ந்தமருது – வொலிவேரியன் சுனாமி குடியேற்ற கிராமத்தில் உள்ள வீதிகள் காட்சி தருகின்றன என்று கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், லக்ஸ்டோ மீடியா ஊடக அமைப்பின் தலைவருமான அஹமட் லெப்பை அன்ஸார் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஸ எம்.பியின் விசேட செயலணி இவரின் வேண்டுகோளை ஏற்று நேற்று(29)  வொலிவேரியன் கிராமத்துக்கு விஜயம் மேற்கொண்டு இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை ஆராய்ந்தனர்.

இதன்போது இங்குள்ள வீதிகளை காண்பித்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் போது,

நடந்து முடிந்த தேர்தல்கள் பலவற்றிலும் எமது மக்களின் வாக்குகளை தொடர்ந்து பெற்று வந்திருக்கின்ற வேட்பாளர்கள் யாருமே இவ்வீதிகளை கண்டு கொள்ள தவறி விட்டார்கள்.

இதனால் மிக நீண்ட காலமாகவே திருத்தி தருபவர் இல்லாமல் இவ்வீதிகள் சுகாதார சீர் கேடுகளின் கூடாரங்களாக மாறி கிடக்கின்றன. குறிப்பாக  கொரோனா, டெங்கு உள்ளிட்ட பேராபத்தான தொற்று நோய்களின் பரவலை தூண்ட கூடிய வகையில் காணப்படுகின்றன.

அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் முன்னாள் பணிப்பாளரான டாக்டர் திலக் ராஜபக்ஸ எம். பி இவ்வாறான வீதிகள் உடனடியாக செப்பனிட்டு தரப்பட வேண்டியதன் அவசியத்தை நிச்சயம் உணர்ந்தவராக இருப்பார். இவரிடம் இருந்து உரிய தீர்வை எதிர்பார்க்கின்றோம் என்றார்.