பொத்துவில் ஊறணி மக்களின் காணி விரைவில் கிடைக்கும்.! 836நாள் போராட்டத்தில் கருணா அம்மான் தெரிவிப்பு!.

(காரைதீவு சகா)


பொத்துவில் 60ஆம் கட்டை ஊறணி மக்களின் நீண்டகால பிரச்சினையான தாம்குடியிருந்த காணிகள் மிகவிரைவில் மீண்டும் பெற்றுக்கொடுக்கப்படும்.

இவ்வாறு நேற்று அங்கு விஜயம்செய்த பிரதமரின் மட்டு.அம்பாறை இணைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான வினாயகமூர்த்தி முரளிதரன்(கருணாஅம்மான்) மக்கள்மத்தியில் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட ஊறணி 60ஆம் கட்டை காணி பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரும்முகமாக கருணாஅம்மான் நேற்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன்  திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வ.கமலராஜன் மற்றும்பொத்துவில் பதில் பிரதேச செயலாளர் எ.சந்தருபன்  முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் பொத்துவில் பிரதேச அமைப்பாளர்  எஸ்..ரமணன் ஆகியோருடன் விஜயம்செய்தார்.

அங்கு 836நாட்களாக தொடர்ச்சியாக முகாமிட்டு சத்தியயாக்கிரகப்பேராட்டத்திலீடுபட்டுவரும்  ஊறணி மக்களுடன் கலந்துரையாடினர். மக்கள் தங்கள் பிரச்சினை பற்றி கூறினர். மக்கள் தலைவி றங்கத்தனா முழுவிபரங்களையும் சமர்ப்பித்து சமகால சவால்கள் பற்றிவிபரித்தார்.

அதன்பின்னர் கருணா அம்மான் அங்கு பேசுகையில்:
பொத்துவில் தமிழ்மக்களது பிரச்சினை பற்றி பிரதமருடன் பேசியுள்ளேன். தற்போது ஆன சூழல் சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதி மட்டுமே கிடைக்கப்பெறவேண்டும். அதனை ஒருவாரத்தில் எமது மேலதிக அரசஅதிபர் ஜெகதீசன் பெற்றதும் காணிகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

நீங்கள் இங்கு பல்லாண்டுகாலம் வாழ்ந்துவந்துள்ளீர்கள். அன்றிருந்த ஒரு குடும்பம் இன்று 9குடும்பங்களாக பெருகியிருக்கும். எனவே அனைவருக்கும் காணி வழங்க ஏற்பாடுசெய்யப்படும். தற்போது 200குடும்பங்களுக்கும் மேலாக காணிவழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முதல் இங்குள்ள காட்டை வெளியாக்க நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறேன். அதுவரை பொறுமையாகஇருங்கள்.

பிரதமர் மஹிந்தராபக்சவின் திட்டத்தின்கீழ் நாட்டில் காணிஇல்லாமல் யாரும் இருக்கக்கூடாது என்றசிந்தனைஉள்ளது.அதன்படி நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 5500குடும்பங்களுக்கு காணி பெற்றுக்கொடுத்துள்ளேன். முழுஇலங்கையிலும் இதுவரை ஒன்றரை லட்சம்பேருக்கு காணி வழங்கப்பட்டுள்ளது.

நீங்கள் எனக்கு கடந்ததேர்தலில்  30ஆயிரம் வாக்குகளை அள்ளிதந்துள்ளீர்கள். எம்.பியாக வராவிட்டாலும் அதற்குமேல் சேவைசெய்யக்கூடிய பதவியை எமது பிரதமர் தந்துள்ளார்.படிப்படியாக பல வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவிருக்கிறேன்.

 
மக்களின் ஒத்துழைப்புக்கிடைத்தால் பாரிய பணிகளை இங்குசெய்யவிருக்கிறேன்.
பெண்தலைமைத்துவம் தாங்கும் குடும்பங்களுக்கு விசேட வேலைத்திட்டம் வகுத்துள்ளோம் என்றார்.