இலங்கையில் முதன்முறையாக மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்ற சிறுவர் பங்களிப்புடனான பாதீட்டு வரைபு தொடர்பான கலந்துரையாடல்

சிறுவர்களின் பங்களிப்புடனான பாதீட்டு வரைபு தொடர்பான கலந்துரையாடலானது  மட்டக்களப்பு மாநகர முதல்வரும், நிதிக்குழுவின் தலைவருமான தியாகராஜா சரவணபவன் தலைமையில் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட வரைபினை  தயாரிப்பதற்காக  இலங்கையில் முதன்முறையாக சிறுவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கும் நோக்கில் மேற்படி கலந்துரையாடலானது  ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக சிறுவர்களின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு ஏற்ற பாதுகாப்பான சூழலினை உருவாக்கும் நோக்கில் யுனிசெப் (UNICEF) மற்றும் செரி (CERI) நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிறுவர் நேய மாநகர செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன்.

சிறுவர்களின் ஆளுமை விருத்திக்கு ஏற்ற வகையிலான செயற்பாடுகளுக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டிய விடயங்களும் சிறுவர்களினால் முன்மொழியப்பட்டன.

இதன்படி 18 வயதுக்கு உட்பட்ட அனைவரும் சிறுவர்களாக வரையறுக்கப்பட்டிருந்த போதும் 12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு சிறுவர் பூங்காக்களில் உரிய பொழுதுப்போக்கு அம்சங்கள் காணப்படாமை, சிறுவர் கழகங்கள் இயங்குவதற்கான இட வசதிகள் இல்லாமை மற்றும் சிறுவர்களுக்கு என வடிவமைக்கப்பட்ட மைதானங்களின் தேவைப்படுகள் என பல்வேறு முன்மொழிவுகளும் சிறுவர்களால் முன்வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து சிறுவர்களின் மேற்படிக் கோரிக்கைகளுக்கு அமைய  2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வரைபில் தேவையான நிதி ஒதுக்கங்களுக்கான ஒழுங்குகளை உள்ளீர்ப்பதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல், மாநகர நிலையியற் குழுக்களின் தவிசாளர்கள், நிதி நிலையியற்குழுவின் அங்கத்தவர்கள், பிரதி ஆணையாளர் உதயகுமார் சிவராஜா, பிரதம கணக்காளர் திருமதி ஹெலன் சிவராஜா, பொறியியலாளர் சித்திராதேவி லிங்கெஷ்வரன், யுனிசெப் நிறுவனத்தின் பிரதம வெளிக்கள அலுவலர் றிபென்சியா, செரி நிறுவனத்தின் தேசிய திட்ட பணிப்பாளர் விஜயரட்ணம் தர்சன் உட்பட சிறுவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்