காட்சி தந்த பேச்சி அம்பாள்

மூ.அருளம்பலம் (ஆரையூர் அருள்)

கடந்த பதினொரு வருடங்களாக கூறக் கூடாது என எனது மனதினுள் மறைத்து வைத்திருந்த இந்த உண்மையை இன்று கூறுவதற்குக் காரணம் எனக்கே முதலில் முதலில் காட்சியளித்ததென்பதனுள்ளிட்டத்தின் விளைவே வெளியீட்டான இப்பாடல்களை சிலர் தாங்களே முதலில் காட்சியைக் கண்டதாகவும், இப்பாடல்கள் சிலவற்றை தாங்களே எழுதியதாகவும் சண்டப் பிரசண்டம் செய்வதைத் தாங்கிக்கொள்ள முடியாத உண்மையறிந்த சில பற்றுள்ள பக்தர்கள் நீங்கள் இந்த உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டுமென்று வினையமாக ஆனால் வேதனைகளோடு விளக்கமாக எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டேயிருப்பதும், அதற்கான அனுமதியான அம்பாளின் ஆசி கிடைத்ததமே குறிப்பேட்டில் குறித்து வைத்ததை தொகுத்த எழுதுகின்றேன்.

ஆயிரத்து தொளாயிரத்து ஒன்பதாம் ஆண்டு இருபத்தி எட்டாம் திகதி செவ்வாய்க்கிழமை கல்லடி-உப்போடை பேச்சியம்பாளின் கதவு திறந்து மூன்றாம் நாள் மதியச்சடங்குப் பூசை முடிந்ததும் அம்மாள் எழுந்தருளி மஞ்சந்தொடுவாய் கண்ணகை அம்பாள் ஆலயத்தை பூசாரிமார், தேவாதிகள், பக்தர்கள் புடைசூழ அடைந்து, கண்ணகை அம்பாள் ஆலய முன் மண்டபத்தில் கும்பத்தை வைத்துவிட்டு அமர்ந்து பூசாரியார் பூசையியற்றிய பின், சில வழக்குகளை விசாரித்து தீர்த்ததன் பின்னர் வெளிநாடு சென்று வந்திருந்த பத்மநாதன் கண்ணன் என்பவரையழைத்து என்னையுமழைத்து கணபதிப்பிள்ளை பூசாரியாரின் முன்னிலையில் இவர் கண்ணகை, பேச்சி, மாரி, காளி போன்ற பல தெய்வங்கள் மீது பல கும்மி, காவடி, தாலாட்டு, காவியம் போன்ற பாடல்களையிதுவரை இயற்றி பாடவைத்து ஒலிப்பேழைகளாக்கி ஒலிக்கச் செய்து எங்களைச் சந்தோசப்படுத்தி குளிரவைத்துள்ளார். இனி எமது ஆலைய விநாயகர், பேச்சியம்பாள் மீது பக்திப் பாசுரங்களை இயற்றித்தர, நீங்கள் அப்பாடல்களை சிறந்த முறையில் இறுவட்டுக்களாக்கி எமது ஆலயத்தில் ஒலிக்கச் செய்வதாக பூசாரியாரின் வலக்கைமீது கண்ணன், என் கைகளை வைத்து தீச்சட்டியிலிருந்து வேப்பிலையுடன் தீர்த்த நிரையும் தனது கையால் எடுத்து தாரைவார்த்து கண்ணனிடம் வாங்கிய பின் நோயாளர்களுக்கும், பக்தர்களுக்கும் மற்றைய தேவாதிகள் மூலம் வழமைபோல மருந்தளிக்கப்பட்டது.

தொடர்ந்து நாவற்குடாவாலயங்களுக்குச் சென்ற பின்னர் வேலூர் காளியம்பாள் ஆலயத்திற்கும் சென்று மருந்தளித்தபின் அன்னையின் ஆலயத்தை வந்தடைந்தா. அம்பாளின் பள்ளயம், வைரவர் சடங்குகள் முடிவுற்றதும் கண்ணன் எனைச் சந்தித்து நாளை மறுதினம் மீண்டும் வெளிநாடு செல்கின்றேன். என் தம்பிக்கு ஏற்பட்ட இடர்களைத் துடைத்து, சந்தோசப்படும் படி, மிகவுயர்ந்த பதவியை நினைத்தபடி அளித்து எமது எண்ணத்தைத் திண்ணமாக்கிய அம்பாளின் ஆஞ்சைப்படி அதிகமான பாடல்களை எழுதுங்கள் என்று கூறி எனது கைபேசி இலக்கத்தைப் பெற்றுக்கொண்டு தமது கைபேசி இலக்கத்தையும் தந்துவிட்டு விடைபெற்றுச் சென்றார்.

கல்லடி – உப்போடை பேச்சியம்பாளின் சடங்கு முறைமைகள், தோற்றம், வரலாறுகளை வைத்து கும்மி, தாலாட்டு, காவடி, ஆக்கப்பாடல்கள் மூன்று, 2002 ஆம் ஆண்டு இயற்றியதை ஆரையம்பதியைச் சேர்ந்த பத்மஸ்ரீ, அகலியா அவர்களின் குரலில் ஜெயம் இசையமைப்பில் மட்டக்களப்பு விசப்பில்லத்தில் ஒலிப்பதிவு செய்து வெளியிட்ட பாடல்களே தொடர்ந்து அவ வாலய சடங்கு காலங்களில் ஓங்கி ஒலித்து பாகாயிணித்து பக்தி பரவசத்தை பக்தர்கள் மனத்தே நித்தமும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

மேற்போந்த அம்பாளின் விபரங்கள் தவிர்த்து அவவின் அருளாட்சி, அதிசய அற்புதங்களை வைத்தே பக்திப் பாசுரங்களை ஆக்கவேண்டும் இதற்கு பேச்சியம்மா, தாயே நீங்களே எப்படி, எவ்வாறான விடயங்களை வைத்து பல பாடல்களை ஆக்க வேண்டும் என்று அனுதினமும் மன உறுதிப்பற்றுடன் அவவையே வேண்டி, தியானித்துக் கொண்டிருந்தேன். அவ சன்னிதி சுற்றி வழிபட்டு உனது மகிமை, மகத்துவம் அனைத்தையும் எனக்குக் காட்டியருளம்மா என வணங்கிநின்றேன். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஆலயத்திற்குச் சென்று விநாயகர், பேச்சியம்பாளை வழிபட்டு வந்துதான் கடமைக்குச் செல்லுவது வழக்கம். விடுமுறை நாட்கள், வெள்ளி, பூரணை நாட்களில் காலை பத்து மணிக்கு நடைபெறும் அபிடேக பூசையை தவறாது சென்று அவ ஆலய முன்னால் அமர்ந்து பார்ப்பது உண்டு.

25.09.2009 வெள்ளிக்கிழமை சற்றுத் தாமதாகவே அபிN;டக பூசையைக் காணச் சென்றபோது, அவவாலய முன்றலின் இரு பக்கங்களும் பெண் பக்தர்களே கூடுதலாக அமர்ந்திருந்ததனால், முன்பக்கமமர்ந்திருந்து ஆபிடேகத்தை அவதானிக்க முடியவில்லை. மனவேதனையோடு விநாயகராலய முன்வாசலூடாகச் சென்று பேச்சியாலயத்தின் பின்பக்கம் தேத்தாமரத்தின் முன்னால் அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு ஆலயத்தினுள் நடைபெறும் அபிடேக பூசை ஒலியையும், பக்தர்களின் அரோஹரா சத்தத்தையும் கேட்கும் போது, ஆம்! இப்ப பாலாபிடேகம், இப்ப தயிராபிடேகம், நெய்யபிடேகம், திருநீறு-சந்தன- குங்கும அபிடேகங்கள் என நினைத்து வழிபட்ட போது, கண்களை விழிக்க என்ன அதிசயம், அற்புதம் அமர்ந்திருந்த தேத்தாமரத்தின் அடியிலிருந்து சற்று உயரத்தில் பீடமதில் பேச்சி அமர்ந்திருக்கின்ற அதே காட்சி அம்மரத்தில் தெரிந்தது. தீபாராதனையும் தோன்றியது. உடல்சிலிர்க்க எனது ஆள்மன உணர்வுதானிது என நினைத்து மீண்டும் கண்களை மூடிக்கொண்டேன். ஆனால் அக்காட்சியின் உண்மைத் தோற்றம் அகக்கண்களிலிருந்து மறையவில்லை. ஆலயத்தினுள் அபிடேகம் நிறைவுற்று அடுக்குத்தட்டு தீபம் காட்டப்பட பக்தர்களின்; அரோகரா சத்தம் செவிபிளக்க கண்களை திறந்தபோது தத்ரூபமாக பீடத்தில் அமர்ந்திருக்கும் அதேகாட்சியும் தீபாராதனையும் தேத்தா மரத்தில் தோற்றமளிக்க, பக்திமின்பாய்கின்ற உணர்வூடாக சுதாகரித்துக் கொண்டு, தீபாராதனை முடிய பக்தர்கள் ஆலய தேத்தாவைச் சுற்றிவருவது வழக்கம். அதன் முன்னரே எழுந்து, உடல் சிறிது நடுங்க ஆலயத்தின் முன் பக்கம் வந்து வணங்கிவிட்டு வீடு நோக்கி ஈருருளியில் வரும்போதெல்லாம் மனக்கண்ணில் அக் காட்சியே மின்னி மின்னி மறைய, அது அடிமன நினைவாக இருக்கும் என நினைத்து வீடுவந்து சேர்ந்தாலும் அக்காட்சியின் பக்திப் பற்றுறுதிவிட்டகலவில்லை.

நினைவெல்லாம் அக்காட்சியே நிறைய, இரவில் நித்திரைக்குச் சென்றாலும் உறக்கத்திலும் அந்த நற்காட்சி தோன்றி மனமெல்லாம் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். அன்றிலிருந்து அதிகாலையில் சென்று விநாயகரை வழிபட்ட பின் அம்பாளின் முன் மலர்சாற்றி வணங்கிவிட்டு கையில் ஒரு மலரைக் கொண்டு தேத்தாமரத்தில் காட்சிதரும் அம்பாளின் அடிக்கமலத்தில் சாற்றி வழிபட்டுவந்தேன். பாடசாலைக்குச் சென்று கடமை செய்து வீடு திரும்பும் வரை அவகாட்சியின் நினைவு, உணர்வால் எந்தத் தடங்கலுமேற்படாது, வீட்டுக்கு வந்தால் மீண்டும் ஏற்பட்டுவிடும். 02.10.2009 வெள்ளிக்கிழமை ஆலயிருந்து வந்ததும், எனது நிலைப்பாட்டை அவதானித்த மகன் எனை வினவ, தேத்தாமரத்தில் அம்பாளின் தோற்றம் தெரிவது போல ஒரு பிரேமையாக இருக்கிறது. காலை வகுப்புக்;கு செல்லும் போதொருக்கால் அவதானிக்கும் படி கூறினேன். மாலை வகுப்பு முடிந்து வந்ததும் அவ்வாறு தெரியவில்லையென்றதும், நின்றா பார்த்தாய், இருந்து அடிமரத்திற்கு சற்று உயர்வாக அவதானித்து நாளை பாரென்றேன், திங்கட்கிழமை மாலைநேர வகுப்பு முடிந்து வந்ததும், அவ காட்சி தெரிவதாக கூற, இப்ப யாரிடமும் எதுவும் கூறாதே, இந்தக் கலிகாலத்தில், விஞ்ஞான யுகத்தில் அப்படி நடக்காதென அடிச்சிக்கூறுவது மட்டுமல்ல எனக்கு பைத்தியம் என்றுகூடக் கூறி பகுடிபண்ணுவார்கள் என்றேன்.

09.10.2009 வெள்ளிக்கிழமை காலை தேத்தாமரத்தடியிலிருந்து பூச்சாதிவிட்டு ஆலயத்தைச் சுற்றிவந்த என்னிடம் வழமையாகத் தொடர்ந்து வழிபட வரும் ஆரையம்பதி “லக்கி” நகைக்கடை முதாலாளி சிறி என்பவர், நீங்க தேத்தாமரத்தின் கீழ் அமர்ந்து அம்பாளுடன் தலையாட்டித், தலையாட்டி கதைக்கிறீர்கள் என்றார். இல்லை, கண்களை மூடிக் கொண்டு வழிபட்டதாக கூற, இல்லை நீங்க அவவிடம் கதைத்துக் கொண்டே இருந்த நீங்க என்ன நடந்தது மறைக்காமல் கூறுங்கள் அவவற்புதம் எனக்கும் தெரியும் என்றார். நான் நடந்தவற்றைக் கூறி நீங்களும் அவதானியுங்கள். ஆனால் எவரிடமும் எதையும் கூறிவிடாதீர்கள் ஏளனம் செய்வார்கள் என்று கூறிவிட்டு வந்தேன். எனது உடல், உளநடக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.

இதே மாதிரி 16.10.2009 வெள்ளிக்கிழமை வழமையாக வழிபடும் பக்தை திருமதி.சிவபாதசுந்தரம் “உங்களிடம் அம்பாள் பேசிகிறாவா? நீங்க அவவோட கதைப்பதை கண்டேன் என்று கூற, அவவிடமும் மற்றவர்களிடம் கூறியது போல் கூறிவிட்டேன். 17.09.2009 சனிக்கிழமை காலை கல்வியற்கல்லூரி மாணவனான லீவு நாட்களில் அவ்வாலயம் வந்து வழிபட்டு விட்டு பயபக்தியுடன் அவஆலய சுத்ததில் ஈடுபடும் செந்தூரன் எனும் தம்பியும் “உங்களுக்கு அம்பாள் காட்சிதாவா வா ஐயா” என்றார். “ஏன் அப்படி கேக்கா தம்பி” என்றேன். நீங்க அவவோடயிருந்து கதைக்கிறீங்க, அப்ப உங்கமுகத்தில் பிரகாசம் தோன்றுகிறதையா என்றார். அவரிடமும் கூறியதும். திருமதி பாலசுப்பிரமணியம் வந்து தனிமையாக அழைத்து உண்மைதானெனக் கூறினார். 19.09.2009 திங்கட்கிழமை காலையலும் வேலூர் கொளனி பக்தர் ஒருவர் கேட்டார்? அப்பொழுதிருந்து எனது உடல் எரிவு, நடுக்கம்அதிகரிக்கத் தொடங்கியது. காய்ச்சல் காய்வது போல் உடல் சூடானது. வீட்டையடைந்து படுத்துக்கொண்டேன். வீட்டவர்கள் பயந்து என்ன நடந்தது எழும்பி சாப்பிடுங்கள் என்று வற்புறுத்தினார்கள். சிறிது நேரம் தூங்கிவிட்டு எழும்புகிறேன் தொந்தரவு செய்ய வேண்டாம் எனக்கூறிவிட்டேம். அன்றிரவு உறங்கச்சென்றபோது, உடல் நடுக்கத்தோடு உடல் வெப்ப நிலையும் அதிகரித்தது. அம்மா தாயே என்னால் இனித்தாங்க முடியாது. இந்த உண்மையை வெளிவர வழிகாட்டம்வென வருந்தி, வேதனையுடன் உறங்கும் போது எனது அருகில் தலைமைத் தேவாதியாக பேச்சியம்பாளுக்கு ஆடும். தேவாதி நிற்பதைக் கண்டு, திடுக்கிட்டு விழித்தேன் இது கனவு, அல்ல, அல்ல நனவு தாயார் வழி காட்டி விட்டார். என நினைத்து, விடிந்ததும், வழமை போல் ஆலயம் சென்று வழிபட்டு விட்டு 20.10.2009 செவ்வாய்கிழமையுடனே “தாஸ் முதலாளியின் கடைக்குச் சென்று தனிமையில் அவரை அழைத்து நடந்தவற்றைக் கூறி நீங்களும் பார்த்து இதற்கு முடிவொன்றைக் காணவேண்டும் என்று கூறிவிட்டு வந்தேன்.

அவரன்று சென்று பார்த்ததாகவும் அப்படித்தெரியவில்லையென்றும் கூறினார். அடுத்த நாள் நானாலய மிருந்து வரும் போது இன்றும் தெரிந்ததா என்று கேட்டார், ஆமென்றேன். நின்றுதான் நான் பார்த்தேன். நாளை நீங்கள் வழமை போல் சென்று விநாயகரை வழிபட்டபின், அங்கே சென்று இருங்கள் நானுங்கள் அருகில் வந்தமர்வேனென்றார். 22.10.2009 வியாழக்கிழமை, காலையில் சென்று விநாயகர் பூசை முடிந்ததுதம் அம்பாளையும் முன்னால் சென்று வணங்கிவிட்டு ஆலயத்தை சுற்றி வளைத்துவிட்டு வேப்பமரத்தின் அம்பாள் தெரியுமிடத்திற்கு முன்னமர்ந்து கொண்டேன். வழமையான காட்சியைவிட பிரகாசமான காட்சியளிக்க கண்கள் ஆனந்த கண்ணீர் மல்க பார்த்திருக்க வலதுபக்கத்தில் தேவாதி வந்தமர்ந்து பார்த்துவிட்டு சந்தேகப் பார்வையால் தெரியவில்லையெனக் சாடைகாட்ட எனது வலது கையிலிருந்த பூவை அம்பாள் தாள்களில் சாத்த சன்னதம் கொண்டு தனது இடக்கையினால், பூச்சாத்திய எனது வலதுகரத்தை பற்றி உணர்ச்சி வேகத்தோடு அழுத்தி “ஆ” என அட்டோலிக்க, பிடியினழுத்தத்தாலெனது கையின் இரத்த ஓட்டம் ஸ்தம்பிப்பது போன்ற உணர்வும் வலியும் அதிகரிக்க, அம்பாளின் அடுத்த தேத்தா மரத்தின் கீழ் கூட்டிக் கொண்டு நின்ற ஒரு பெண் சடுதியாக என்ன தாயே என்று கூட்டியதை நிறுத்திவிட்டு ஓடிவர, தேவாதி பற்றியிருந்த எனது கரத்தை விட்டுவிட்டு அவவை அமரச் சொல்லி சைகை காட்ட, அவ அவரின் வலது பக்கம் அமர்ந்திருந்து அவர்காட்டிய அந்த அம்பாள் காட்சியைப் காட்ட தரிசனம் கிடைத்ததால் அவ “அரோகரா” என்று சத்தமிட நான் சுதாகரித்துக் கொண்டு விரைந்து எழுந்து அம்பாளின் சன்னதியின் முன்பக்கம் சென்றதும் எனது கைவலி, நடுக்கம் குறைந்து சுயநினைவுவர தப்பினேன் பிழைத்தேனென பிள்ளையாரின் ஆலய முன்வந்து எனது ஈருருளியை எடுத்துக் கொண்டு எப்படித்தான் விரைந்து வீட்டை அடைந்தேனோ? வந்த பின்தான் உணர்ந்தேன்.

ஆனால், முதல் நாள் நான் கூறியதை தேவாதி நாளை இப்படி நடக்கும் என்ற மனஉணர்வால் உணர்ந்ததாலோ என்னவோ தனது மைத்துநர் தனபாலன், பேச்சிக்காடு மற்றொரு தேவாதி விநாயகராலய பூசகர், கனக்கப்பிள்ளை, கந்தலிங்கம் போன்றவவர்களிடம் கூறிவைத்தபடி, அவர்களும் அங்கு சென்று அம்பாள் காட்சிகாண, அதைதொடர்ந்து அதையறிந்த பக்தர் கூட்டம், ஊரவர்கள் ஒன்று கூடிக் காட்சி கானத் திரள, பக்தர் கூட்டத்தை கட்டுப்படுத்தி ஒவ்வொருவராக வரிசையில் சென்று தரிசனம் காண கம்புகள் நாட்டி, கயிறுகட்டி ஒழுங்குகள் செய்து கூடுமடியார்களுக்கு குளிர்பாணமும் பருமாற, பிரதான வீதியால் சென்ற வாகனங்களில் வந்தவர்களும் சனக்கூட்டக் காரணமறிந்து வாகனங்களை பிள்ளையார் வீதியில் நிறுத்திவிட்டு சிங்கள, முஸ்லிம் பிரயாணிகளும் வந்து பார்வையிடுவதையும், பகல் நேர வகுப்பு முடிந்து வந்த மகன் அதிசயித்துக் கூற் மதியம் 12 மணிக்கு தாஸ் முதலாளி தொலைபேசியில் அழைத்து வக்கர் மாவடியில் நிற்கும் வேப்பமரத்தால் பால் வடிவதாகவும், பக்தர்கூட்டம் அங்கும் சென்று பார்த்து அதிசயிப்பதாவும் கூறி வந்து பார்க்கும்படி கூற எனது உடல்நிலை சற்றுச் சீரானதும் வந்து பார்க்கின்றேன் எனக் கூறிவிட்டு மாலை 4 மணியளவில் மீண்டுமழைத்து நரசிங்கராலய வளவிலுள்ள ஒரு வெப்பமரத்தாலும் பால்வடிவதாக கூற நாளை காலை வந்து பார்க்கின்றேன் எனக் கூறிவிட்டேன்.

அடுத்தநாள் காலை மகனோடு துவிச்சக்கரவண்டியில் செல்லும் வழியில் நரசிங்கராலயத்தில் சென்று பார்க்கும் போது சிறிதளவு பால் வடிவதையும் ஆனால் நிலத்தில் நேற்று வடிந்த பால் வடிவைக் காணக்கூடியதாகவும் இருந்தது. பேச்சியம்பாள் ஆலயத்திற்குச் சென்றதும் பத்தர்கூட்டம் கூடுதலாக நிற்பதை அவதானித்ததும், பிள்ளையாராலத்தின் முன் சென்று வணங்கிவிட்டு நின்ற எங்களை கண்ணுற்ற தாசையா விரைந்து வந்து அழைத்து பத்திரிகை நிருபரினம் சிலர் தாங்கள் தான் அவதானித்ததாகவும் பல மாதியான கதைகளைக் கூறுவதாகவும் நீங்க வந்து உண்மைச் சம்பவத்தை கூறுங்கள் எனக் கூற, அம்பாள் எனக்களித்த பணி முடிந்து விட்டது. எவரெவர் எப்படிக் கூறினாலும் உண்மையென்பது உறங்காது நீங்கள் அறிவீர்கள் என்று கூறிவிட்டு வீடு வந்து சேர்தோம். அன்றிரவு உறங்கும் போது பால் வடிந்த வேப்பமரங்கள் உள்ள இடங்கள் அம்பாள் பலிச்சடங்கன்று பலிபெறுமிரு எல்லைகள் என்பதை எனது மனதிற்கு உணர்த்தியதாக உணர்ந்தேன்.
தொடர்ந்து நான்கு நாட்கள் இக்காட்சி தெரிந்ததாகவும் 85மூ மக்கள் சாதி, மத பேதமின்றி தரிசித்ததாகவும் 15மூ மக்கள் பார்த்தும் காட்சி புலப்படவில்லையென்றும், இது பொய்யென்றும், பார்க்காதவர்களில் சிலர் இந்தக் கலிகாலத்தில் இப்படி நடக்காது என்றும் விஞ்ஞான உலகத்தில வேடிக்கையான செயலென்றும் வாய்க்கு வந்தபடி கதைப்பதாகவும், பூசைமுடிக்கும் பூசகரொருவர் அவ்வாலயத்துள் நின்று பூசை முடித்த எனக்கு இப்படியாக காட்சி தெரியவில்லை இவர்களுக்குத்தான் தெரிந்தது என்று கூறியதும் காதில் வந்து மோதியது.

ஆஸ்திகரின் கண்களுக்கு தெரிந்ததும், நாஸ்திகரின் கண்களுக்கு மறைந்ததும் அவபாடல்களை எழுதுவதற்கு காட்சியளித்து தேவையான தரவுகளைத் தந்து, தகவல்களாக்கி பாடல்களாக்குவதற்கு அம்பாளால் அளிக்கப்பட்ட அனுக்கிரகம் என உணர்த்தி, அவமேல் பாடிய பதினெட்டுப் பாட்டுக்கள் ஒவ்வொன்றுக்கும் முதலடி எடுத்துக் கொடுத்து அப்பாடல்களின் வரிகளை நித்திரை செய்யும் போது நினைவலைகளாக பாடல்கள் வந்து மோத, அப்பாடல்களின் வரிகளை வடிவமைத்து சீராக்கும் சிந்தனையும் அளித்து, ஒவ்வொரு பாடல்களும் அவ்வாலயவமைப்பு, தோற்றம், காட்சியளித்த சிறப்பு, அருளாட்சி, அதன்மாட்சி இனைத்துப் பாடல்களை உயிரோட்டமுள்ளவையாக அமைக்க வைத்து, பக்தர்களின் உள்ளத்தில் பதியவைத்து கேட்கும் போதெல்லாம் மனக்கண்களிலும், உணர்விலும் பக்திமின் பாய்ச்சி பரபக்தியை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் கேட்கவேண்டும் என்ற உணர்வை உள்ளத்தில் உருவக்கின்றதென்று அவவின் உண்மையை மெய்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றதென்பதை மேற்போந்த சம்பவங்கள் இன்று சரித்திரமாக பேச்சியன்னையின் திருக்காட்சியே பாடல்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதென்பதனை பேச்சியம்பாளின் இப்பாடல்களை கேட்பவர்கள் மறுக்கவோ, மறுதலிக்கவோ மாட்டார்கள் என்பது திண்ணமான உண்மையாகும்.