வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு இன்று முதல் கட்டம் கட்டமாக தளர்த்தப்படுகிறது

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கடந்த 26 நாட்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு இன்று வெள்ளிக்கிழமைகாலை 6 மணிமுதல் முதல் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டுகின்றது.
பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்டவர்களிடம் மேற் கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையில் வாழைச்சேனைப் பொலிஸ்பிரிவிலனைச் சேர்நத பலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகினர் அதனைத் தொடர்ந்து கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று தெற்கு மற்றும் கோறளைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் 6வது கூட்டம் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கறுணாகரன் தலைமையில்  நேற்று மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. இதன்போது அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
மேலும் மட்டக்களப்பில் இனங்காணப்பட்ட  82 கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த மூன்று தினங்களாக எழுந்தமான முறையில் மேற்கொள்ளபட்ட பீ. சீ.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில் எவருக்கும் தொற்றில்லை என்ற முடிவுகளுக்கமையவே இக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.
இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஏ. லதாகரன், மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, இராணுவ 231 ஆம் படைப்பரிவு அதிகாரி கேணல் எஸ்.பீ.ஜீ. கமகே, பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர், ஏ. மயூரன், கிழக்கு மாகாண கொரோனா தடுப்பு இணைப்பாளர் டாக்டர் எம். அட்சுதன், மாவட்ட தொற்று நோயியல் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் வே. குணராஜசேகரம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச். முசம்மில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் வீ. தவராஜா, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.