மன்னாருக்கு வெளி மாவட்டத்திலிருந்து பொருட்களை கொண்டுவருவோர் முருங்கனில் வைத்து சுகாதார நடைமுறைக்கு உள்ளாக்கப்படுவர்

( வாஸ் கூஞ்ஞ)

வெளி மாவட்டங்களிலிருந்து மன்னாருக்கு பொருட்களை கொண்டுவரும் வானங்கள் அதில் ஈடுபடுபவர்கள் 13 ந் திகதி (13.11.2020) தொடக்கம் முருங்கன் பகுதியில் வைத்து சுகாதார நடைமுறைகளுக்கேற்ப பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் என மன்னார் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது நாட்டில் பரவலாக இடம்பெற்று வரும் கொரோனா 19 விடயமாகவும் மன்னார் மாவட்டத்தில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கின்றது இதற்கான செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பான ஒரு கருத்தமர்வு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் முல்லைத்தீவு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கே.காதர் மஸ்தான் தலைமையில் செவ்வாய் கிழமை (10.11.2020) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இவ்கூட்டத்தில் மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மன்னார் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் த.வினோதன் உட்பட பாதுகாப்பு அதிகாரிகள், பிரதேச செயலக செயலளார்கள், அரச திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து மன்னார் முல்லைத்தீவு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கே.காதர் மஸ்தான் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்

கடந்த 02 ந் திகதி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பசில் ராஜபக்ச இவர்கள் உள்ளடங்களாக கொரோனா 19 தெடர்பாக எடுத்த முடிவுகளுக்கமைய இவ் செயல்பாடுகள் மன்னாரில் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதை கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் ஒக்டோபர் மாதம் சுகாதார அமைச்சினால் தெரிவிக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளும் இங்கு கவனம் செலுத்தப்படுகின்றதா என்பதையும் நாம் ஆராய்ந்துள்ளோம்.

இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் தொடர்பாகவும் அவ்வாறு வெளி மாவட்டங்களிலிருந்து மன்னாருக்கு பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

வெளி மாவட்டங்களிலிருந்து மன்னாருக்கு கொண்டு வரப்படும் பொருட்கள் வாகனங்களை முருங்கள் பகுதியில் வைத்து சுகாதார நடைமுறைகளை கையாளுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது 13 ந் திகதி (13.11.2020) தொடக்கம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகின்றது.

அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட குடுப்பங்களுக்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு பெறாதவர்கள் தெரியப்படுத்தினால் அதற்கான நடவடிக்கை உடன் எடுக்கப்படும்.

மன்னாரில் கொரோனா தொற்று நோய் ஏற்படாது தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று இவ் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.