மன்னார் மாவட்ட கிராம உத்தியோகத்தர் சி.விஜேந்திரனது கொலை கண்டிக்கத்தக்கது. மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் கண்டனம்.

           கண்டன அறிக்கை
மன்னார் மாவட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயல கிராம உத்தியோகத்தர் திரு சின்னத்துரை விஜேந்திரன் அவர்களது கொலைச் சம்பவத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

பொதுமக்களுக்கான சேவையினை மனங்கோடாது திறம்பட செய்யும் வகையில் இலங்கை நிருவாகத்தின் அடிமட்ட உத்தியோகத்தர்களாக செயற்படுபவர்களே கிராம உத்தியோகத்தர்கள். எமது நாட்டிலுள்ள கூடுதலான திணைக்களங்களுடன் இணைந்து பொதுமக்களுக்கான சேவையினையும் பொறுப்பு கூறலையும் முன்னெடுத்து செல்கின்ற ஒரேயொரு பதவியான கிராம உத்தியோகத்தர் பதவியில் மிக நீண்டகாலம் அர்ப்பணித்த திரு.சி. விஜேந்திரன் அவர்களை 03.11.2020 அன்று இனந்தெரியாது அடித்து கொலை செய்துள்ள சம்பவத்தினை மட்டக்களப்பு மாவட்ட கிராம உத்தியோகத்தர்களாகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
எமது மாவட்டத்திலும், பிற மாவட்டங்களிலும் கடந்த காலங்களில் இவ்வாறான மர்மக்கொலைகள் இடம்பெற்றுள்ளன. அதற்கான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்ட போதும், உரியவாறான நீதி கிடைக்காமையினாலேயே மேலும் இவ்வாறு சம்பவங்கள் எழுகின்றன. எனவே சரியான நீதியின்பால் அனைத்து குற்றவாளிகளும் நிறுத்தப்பட்டு நாட்டில் இனிவரும் காலங்களில் ஒரு அரசாங்க உத்தியோகத்தர் கொலைசெய்யப்பட்டாலோ அல்லது கடமையில் பொதுமகனால் துன்புறுத்தப்பட்டாலோ எதிர்கொள்ள வேண்டிய தண்டனை இதுதான் என்பதனை நீதி தேவதை வெளிக்காட்ட வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றோம்.
அத்துடன் அகால மரணமான சி.விஜேந்திரனது ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பதுடன் அவருடைய குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தலைவர், செயலாளர்,
ஐ. கி. உத். சங்கம்
மட்டக்களப்பு