காத்தான்குடி கொரனா தொற்றாளர் கல்முனையில் உணவருந்திய ஹோட்டல்மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை நகரில் கொரோனா தொற்றாளர் உணவருந்திய ஹோட்டல் ஒன்று மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

இங்கு கடமையாற்றிய பணியாளர்களின் சுயதனிமைப்படுத்தல் காலம் பூர்த்தியான பின்பு, கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னரே இந்த ஹோட்டல் மீண்டும் திறப்பதற்கு அனுமதிக்கப்படும் என கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.றிஸ்னி தெரிவித்தார்.

காத்தான்குடியை சேர்ந்த குறித்த நபர் சில தினங்களுக்கு முன்னர் கல்முனை நகருக்கு வருகைதந்து பஸ் நிலையப்பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் உணவருந்தியிருப்பதுடன் மற்றொரு வர்த்தக நிலையத்திற்கும் சென்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை (04) மட்டக்களப்பு, கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இவர் வழங்கிய வாக்குமூலத்தையடுத்தே பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் குறித்த ஹோட்டலை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பணியாற்றிய அனைவரையும் அடுத்த 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் குறித்த கொரோனா தொற்றாளர் கல்முனை நகரில் சென்றுவந்த வர்த்தக நிலையம் எது என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற சூழ்நிலையில், வெளி ஊர்களைச் சேர்ந்த எவருக்கும் கல்முனையில் அடைக்கலம் கொடுக்க வேண்டாம் எனவும் கொரோனா கட்டுப்பாடு சுகாதார வழிமுறைகளை பொறுப்புடன் கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்தியுள்ள கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.றிஸ்னி, இந்த அறிவுறுத்தல்களை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்