கொவிட் திருமலையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.

திருகோணமலை மாவட்ட கொவிட் 19 செயலணியின் விசேட கூட்டம்  செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் நடைபெற்றது.

தற்போது நாட்டில் உள்ள கொவிட் 19 பரவல் நிலையை கருத்திற்கொண்டு மாவட்டத்தின் அனைத்து மக்களும் அரசாங்கம் மற்றும் சுகாதாரத்துறையினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்களை முழுமையாக பொறுப்புடன் கடைப்பிடிக்கவேண்டும்.
குறிப்பாக முகக்கவசம் அணிதல் ,சமூக இடைவெளி பேணல் ,கைகளை கிருமித்தொற்று ஏற்படா வண்ணம் கழுவுதல், ஒன்றுகூடல்களை தவிர்த்தல்,சமய நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளை நடாத்தும் போது அதற்கான சுற்றுநிருபங்களை கடைப்பிடித்தல் அத்தியவசியமானது என்றும் அரசாங்க அதிபர் இதன்போது குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக திருகோணமலை நகர பொதுச்சந்தையின் செயற்பாடுகளை கொவிட் 19 ஆரம்பத்தில் ஏற்பட்ட போது மேற்கொண்ட பொறிமுறையைப்போல் மேற்கொள்வதென்றும் அதேபோன்று ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் வரும் சந்தைகளை மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து பிரதேச ரீதியான கொவிட் 19 செயலணி கூடி உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பேணி  மேற்கொள்ளுதல் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
 மாவட்டத்தின் எல்லைப்புறங்களில் தற்போது முன்னெடுக்கப்படும் சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து பேணுவதுடன் கொவிட் 19 ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து மாவட்டத்திற்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பில் இம்மாவட்டத்திற்குள் அவர்கள் மூலம் பரவாமல் இருப்பதற்கான நடைமுறைகள் கையாளப்படலின் அவசியம் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.
பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புபட்ட 09 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களோடு தொடர்புகொண்டவர்களுக்கு PCR பரிசீலனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன்போது  திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள்
 பணிப்பாளர் டொக்டர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச வைத்தியசாலை கொவிட் 19 தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் நிலையமாக செயற்பட்டுவதுடன் அங்கு நாட்டின் பல பிரதேசங்களை சேர்ந்த 92 கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.இப்பிரதேசத்தில் இவ்வைத்தியசாலை ஏற்படுத்தப்பட்டது தொடர்பில் பிரதேச மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.இவ்வாறான பல வைத்தியசாலைகள் சன நெரிசல் உள்ள பிரதேசங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வைத்தியசாலைக்கு அருகில் உள்ளவர்களுக்கு தொற்று ஏற்படும் என்று மக்கள் அச்சம் கொள்ளவேண்டாம் என்றும் அவ்வாறான சம்பவங்கள் இதுவரைகூட பதிவாகவில்லை என்று இதன்போது உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எம்.ஏ.அனஸ்,திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.