மு. கா விடயத்தில் மூக்கை நுழைக்க சுமந்திரனுக்கு எவ்வித அருகதையுமில்லை :

உச்சபீட உறுப்பினர் மௌலவி யூ.எல்.ஜபீர் காட்டம்

நூருல் ஹுதா உமர்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு என்று கொள்கைகள் இருக்கின்றது. எங்களின் கட்சிக்கு ஜனநாயக உரிமைகள் உள்ளது. எங்களின் எம்.பிக்களுக்கு சமூக பொறுப்புக்கள் இருக்கிறது. சமூகத்தை வழிநடத்த நன்றாக அனுபவமும் இருக்கிறது. அதை கொண்டு அவர்கள் முடிவு செய்துள்ளார்கள். அதை கேள்விக்குட்படுத்தும் எவ்வித அருகதையும் சகோதரர் சுமந்திரன் அவர்களுக்கு இல்லை என ஸ்ரீ.ல.மு.கா.உச்சப்பீட உறுப்பினரும் இறக்காமம் பிரதேச சபை முன்னாள் தவிசாளருமான மௌலவி யு.கே ஜபீர் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அவர்கள் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது 20ஆம் திருத்த சட்டத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்களுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க படவில்லை. அதனால் எங்களுக்கு நம்பகத்தன்மை இல்லை என்ற வாதத்தை முன்வைத்துள்ளார். அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

இந்த பேட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. திரு. எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்களை நீக்க வலியுறுத்தும் எந்த தகுதியும் இல்லாதவர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். என்பதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியுலம்மல்ல.  சுமந்திரன் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் ஆலோசகருமில்லை. எங்களின் விடயங்களில் தலை போட அவர் அருகதையற்றவராகவே நாங்கள் பார்க்கிறோம்.

சமூக ஒற்றுமை தொடர்பில் எதுவும் தெரியாத அவர் சமூகங்கள் தொடர்பில் பேசுவது வேடிக்கையாக உள்ளது. எதிரணி தலைவரை போன்று கருத்து வெளியிட்டால் அவர் எதிரணி தலைவராகி விட முடியாது. எங்களின் சமூகத்தின் தேவையென்ன அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நன்றாக அறிந்த ராஜதந்திரிகளை தான் முஸ்லிம் மக்கள் தமது பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்பியுள்ளார்கள். அவர்களுக்கு பாடம் எடுக்கும் அளவுக்கு சுமந்திரன் அவர்களை அவ்வளவு சுத்தமானவராக நாங்கள் பார்க்கவில்லை.

எங்களின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு என்று கொள்கைகள் இருக்கின்றது. எங்களின் கட்சிக்கு ஜனநாயக உரிமைகள் உள்ளது. எங்களின் எம்.பிக்களுக்கு சமூக பொறுப்புக்கள் இருக்கிறது. சமூகத்தை வழிநடத்த நன்றாக அனுபவமும் இருக்கிறது. அதை கொண்டு அவர்கள் முடிவு செய்துள்ளார்கள். அதை கேள்விக்குட்படுத்தும் எவ்வித அருகதையும் சகோதரர் சுமந்திரன் அவர்களுக்கு இல்லை.

நீங்கள் எடுக்கும் தீர்மானங்களையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் எடுக்க வேண்டும் என்று நினைப்பது உங்களின் முட்டாள் தனம். இரு சமூக சகோதரத்துவமே தெரியாத உங்களின் அஜந்தாக்களுக்கு முஸ்லிம் சமூகத்தை பலியிட முடியாது. எடுப்பார் கைப்புள்ளையாக முஸ்லிம் சமூகத்தை எண்ணிக் கொண்டிருக்கும் உங்களின் எண்ணங்களை நீங்கள் கைவிட வேண்டும்.

திரு. எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுகளின் படி அரசை ஆதாரியுங்கள் என்றால் ஆதரிக்கவும் எதிருங்கள் என்றால் எதிர்க்கவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியுமில்லை உங்களின் கீழ் இயங்கும் இயக்கமுமில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். என்பதுடன் உங்களின் முடிவுகளுடன் முரண்பட கூடாது என்று நினைப்பது எவ்வையில் நியாயம் என்று கேட்க விரும்புகிறேன்.

வட மாகாண தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் வேறு என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். உங்களின் மேலாதிக்கவாத சிந்தனை அறிக்கைகளை இத்துடன் நிறுத்திக்கொள்வது நன்று.

கல்முனை, வாழைச்சேனை பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகளுக்கே விட்டுக்கொடுப்பு இல்லாத நீங்கள் வடக்கு கிழக்கை இணைத்து எங்களை நசுக்க போராட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை இங்கு யாரும் அறியாமல் இல்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தொடர்பில் முஸ்லிம் தலைமைகள் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்திருந்தால் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் இந்நேரம் கொந்தளித்திருக்கும் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்றார்